இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் குழு கூட்டம் தொடங்கியது
துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை வழங்கும் சட்டத்தை சுப்ரீம்கோர்ட்டு சமீபத்தில் அமல்படுத்தியது.
இந்நிலையில் முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பா.ஜ.க.வின் 13வது தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நயினார் நாகேந்திரனை நாற்காலியில் அமரவைத்தனர்.
முன்னதாக பரிவட்டம் கட்டி செண்டை மேளம் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
வக்பு திருத்த சட்டம்: இடைக்கால உத்தரவுகளை நிறுத்திவைத்தது சுப்ரீம்கோர்ட்டு
வக்பு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை (17.04.2025) வரை நிறுத்திவைப்பதாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
நாளை மதியம் 2 மணி அளவில் விசாரணை நடைபெறும் என்றும், பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என சுப்ரீம்கோர்ட்டு தலைமை அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் வக்பு வாரியத்தில் 2 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தவிர மற்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்றும், வக்பு சொத்துகளை மாவட்ட கலெக்டர் வகைப்படுத்தலாம் ஆனால் நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
சீமான் மீது 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
சீமான் பேச்சுக்களுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால், குறைந்தபட்சம் 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாசமாகப் பேசியதற்காக சீமான் மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி இந்த காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மேலும் சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் நீதிபதி பி.ஆர்.கவாய்
சுப்ரீம்கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் மே 14ம் தேதி பதவியேற்கிறார்.
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் வரும் மே 13ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பி.ஆர்.கவாய் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்.
காலை உணவு திட்டத்தில் மாற்றம் - அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்பு
வரும் கல்வியாண்டு முதல் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் என்றும், அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளதாகவும் சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
வெளியான முக்கிய அறிவிப்பு : கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம்
சென்னையில் வரும் 21ம் தேதி முதல் கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1 டன்னுக்கு குறைவாக கட்டிட கழிவுகள் இருந்தால் சென்னை மாநகராட்சியே அகற்றும் என்றும், 1 டன்னுக்கு மேல் இருந்தால் டன்னுக்கு ரூ.2,000 வீதம் வசூல் செய்யப்படும் என்றும் கூடுதல் ஆணையர் ஜெயச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்களை அகற்ற கோர்ட்டு உத்தரவு
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆகியவற்றின் பெயர்களையும் அரசுப் பள்ளி என்று பெயர் மாற்றவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.