இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து 7-வது நாளாக காரைக்கால் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் திடீரென ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் நடைமேடையில் இருந்து இறங்கி, ரெயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும்போது கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார் என புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை. அவர் பேசியதைதான் கூறினேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடையமாட்டேன். அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது, த.வெ.க. தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? மும்மொழி கொள்கையை எதிர்க்கும் விஜய் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தாலும் அங்கிருந்து நிறுத்தி அரசு பள்ளியில் சேர்க்க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வழக்கு விசாரணை தொடர்பாக சீமான் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520-க்கும் ஒரு கிராம் ரூ.7,940-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த குளிர்கால சூறாவளி தாக்குதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதலில் பலர் சிக்கி கொண்டனர். கென்டகியில் 8 பேர் உள்பட இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்.
இதுபற்றி கென்டகி மாகாண கவர்னர் ஆண்டி பெஷீர் கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருவேற்காடு: ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே. தெரு, ராணி அண்ணா நகர், அசோக் மெடோஸ், வள்ளி கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சுரியன், ஆர்.ஓ.ஏலியஷ், வட நூம்பல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது.
இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள், கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் என பலரும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.