திருவள்ளூரில் தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குடியிருப்பில் அமரேஷ் பிரசாத் (35) என்பவர் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இறப்புக்கு நீதி கோரி நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதை அடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர்.
செப். 5 ஆம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் - செங்கோட்டையன்
கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சூடானில் கடும் நிலச்சரிவு; நிலச்சரிவால் அழிந்த கிராமம்
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐநா சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதுரையில் தேர்தல் பணியை தொடங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியில்தான் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் இன்று அமைச்சர் மக்களை சந்தித்து பேசினார்.
குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விண்ணப்பம்
தேமுதிக எம்.எல்.ஏ. விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு, அவர் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடும்ப பென்ஷன் கோரி சட்டப்பேரவை செயலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.15,000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
விஜயகாந்த் வீட்டு செல்லப்பிராணி
கொடைக்கானலில் அகில இந்திய அளவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் நாய் (இங்கிலீஷ் செட்டர்) முதல் பரிசை தட்டிச்சென்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. அப்போது 10 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காத டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து டாக்டர் ராமதாசிடம் வழங்கினர். இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும் நிலையில், நாளை அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை கட்சியின் நிறுவனத் தலைவர் என்ற முறையில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் விமானப்படையில் ஆட்சேர்ப்பு
தாம்பரம் விமானப்படை தளத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சேர்க்கை - தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று உடற்தகுதித் தேர்வு காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. காவல்துறை சார்பில் 120 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் தற்காலிக கழிவறை, குடிநீர் மற்றும் நிழற்குடை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேயிலை ஏற்றுமதி தேக்கம்
50% வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தேயிலை ஏற்றுமதி தேக்கம் அடைந்துள்ளது. கடந்தாண்டு 1.7 கோடி கிலோ ஏற்றுமதியான நிலையில் தற்போது வரை 60 லட்சம் கிலோ மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.
இரு தொழிலாளர்கள் பரிதாப பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி, காளிமுத்து (37), பிரமோத் [26] ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.