மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நேற்று முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கி இருந்தார் பிரதமர் மோடி.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 ஆயிரம் சதுர மீட்டர் வரையான தளங்களில் விதிமீறலுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், நடுத்தர, குறைந்த மதிப்பு கொண்ட கட்டிடங்களை விதிமீறல்களை சரிசெய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திமுக எம்.பி. கனிமொழியுடன் வானதி சீனிவாசன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் சந்தித்து பேசினர். மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியிடம் புன்னகையுடன் நலம் விசாரித்தார்.
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் வெளியானது
சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை பிரபல நடிகர்களான விஷால், சிம்பு மற்றும் கார்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
'அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலை தொடங்கும் இந்தியா' - பாகிஸ்தானை எச்சரித்த அந்நாட்டு உளவுத்துறை
அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறுகையில், "பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது" என்று கூறினார்.
"என் நெஞ்சில் குடியிருக்கும்.." - தொண்டர்களுக்கு கட்டளையிட்ட விஜய்
தவெக தலைவர் விஜய் கூறுகையில், “உங்க அன்ப நான் மதிக்கறேன்... இனி எப்பவும் மதிப்பேன்... அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது... நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க... தப்பே இல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே மாதம் 21-ம் தேதி மாலை துவங்கி மே மாதம் 22-ம் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.
இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
நெல்லை: பாலியல் தொல்லை புகாரில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்
தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்
சித்திரை மாதத்தின் விஷேச தினமான இன்று(புதன்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.