அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக பனியன் தொழில் உள்ளிட்ட ஜவுளி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.;
திருப்பூர்,
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த வரி விதிப்பின் காரணமாக பனியன் தொழில் உள்ளிட்ட ஜவுளி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் அந்தந்த நிறுவனங்களில் தேக்கமடைந்து கிடக்கின்றன. இதனால், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில், உற்பத்தி குறைப்பு, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஆகியவை ஏற்பட்டு உள்ளது. மேலும் வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தவிர்க்க, மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக திமுக எம்.பி. ஆ.ராசா தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், சு.வெங்கடேசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பதாகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் வருகின்றனர். அமெரிக்க வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மட்டும் தொழிலாளர்களின் குரலாய் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கும் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.