பிரதமர் மோடி - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்திக்கிறார்;
பீஜிங்,
பிரதமர் மோடி ஜப்பான், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 29ம் தேதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தார்.
இதையடுத்து, இந்தியா , ஜப்பான் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு சீனா சென்றார்.
அவர் சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனா சென்றுள்ள பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்திக்க உள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.