
14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சுதந்திர தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு.
இதை நிறைவேற்றி முடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என இவ்விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கட்டப்பொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்படும். 2ஆம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.15ஆயிரமாக உயர்த்தபடும்.
2ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி ரூ.8,000ஆக உயர்த்தப்படும். முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும் முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 33 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.






