பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால... ... எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Daily Thanthi 2025-07-22 06:42:06.0
t-max-icont-min-icon


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை கூடியவுடன், சமீபத்தில் மறைந்த 8 முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு ஆழ்ந்த வேதனை தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார். ஆமதாபாத் விமான விபத்தில் 260 பேர் பலியானதற்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

பின்னர், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, ''அனைத்து பிரச்சினைகள் பற்றியும் விவாதம் நடத்த அனுமதி அளிக்கிறேன். இப்போது கேள்வி நேரத்தை நடத்த விடுங்கள். விதிமுறைப்படிதான் சபை இயங்க வேண்டும்'' என்று கூறினார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோரும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறினர். அதை ஏற்காமல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதை யடுத்து, சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

சபை மீண்டும் கூடியபோது, சபாநாயகர் இருக்கையில் பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் இருந்தார். அப்போதும், 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிஎம்.பி.க் கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களின் செயலை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், இருக்கைக்கு திரும்பிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரை சபையை ஜெகதாம்பிகா பால் ஒத்திவைத்தார்.

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோதும், அமளி தொடர்ந்தது. எனவே, சபாநாயகர் இருக்கையில் இருந்த சந்தியா ரே, மாலை 4 மணி வரை சபையை ஒத்திவைத்தார்.

4 மணிக்கு சபை கூடியபோதும் அமளி நீடித்தது. சபாநாயகர் இருக்கையில் இருந்த திலீப் சைக்கியா, கோவா சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதாவை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒப்புக்கொள்ளாததால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். முதல் நாளிலேயே சபை 4 தடவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில், பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள், "பஹல்காம் தாக்குதல் குறித்தும், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து போரை நிறுத்தியதாக டிரம்ப் உரிமை கோருவது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உறுப்பினர்கள் ஒத்திவைப்பு நோட்டீசை வழங்கினர். பஹல்காம் தாக்குதலை நினைவுகூர்ந்த கார்கே, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யாரும் இதுவரை பிடிபடவோ, அழிக்கப்படவோ இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். பஹல்காமில் குறைபாடு இருந்ததாக காஷ்மீர் கவர்னர் கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பதில் அளித்த சபை தலைவர் ஜெகதீப் தன்கர் இந்த விவகாரம் குறித்து உறுப்பினர்கள் விரும்பும் அளவுக்கு முழுமையான விவாதத்தை உறுதி செய்வதாக கூறினார்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சபை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறினார்.

மதியம் 12 மணிக்கு திட்டமிட்டபடி, கேள்வி நேரத்திற்காக சபை கூடியபோது, காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தப் பிரச்சினையை எழுப்பியது, தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன. பின்னர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தாங்கள் கேட்டுக்கொண்டபடி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம், இந்த வார நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு மத்திய அரசின் பிரதிநிதிகள், பிரதமர் மோடி வெளிநாடு செல்வதாகவும், அவர் சபையில் இருக்கும்போது விவாதம் நடத்த வேண்டும் என்றால், அடுத்த வாரம்தான் விவாதம் நடத்த முடியும் என்றும் கூறினர்.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பஹல்காம் தாக்குதல் ஆகியவை குறித்து மக்களவையில் 16 மணி நேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் என மொத்தம் 25 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இந்த விவாதம் அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஆனால், இந்த வாரமே விவாதத்தை தொடங்க வேண்டும், பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

விவாதத்தின்போது, உள்துறை மந்திரியும், ராணுவ மந்திரியும் சபையில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், மணிப்பூர் நிலவரம் ஆகியவை பற்றியும் விவாதம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

விவாதத்தின்போது, பிரதமர் மோடி பேசுவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டம் முடிவடைந்த பிறகு, பிரதமர் மோடி, மூத்த மத்திய மந்திரிகளை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து, மூத்த மத்திய மந்திரிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைல்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்றும், எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மக்களவையில் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்றும். சிறப்பு தீவிர மதிப்பாய்வு (SIR) பிரச்சினையை இரு அவைகளிலும் எழுப்ப இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story