சிறையில் தூங்க முடியாமல் அவதிப்படும் நடிகர் தர்ஷன்; போர்வை வழங்க கோர்ட்டு உத்தரவு

சிறையில் கடும் குளிரால் தூங்க முடியாமல் அவதிப்படும் நடிகர் தர்ஷனுக்கு கூடுதல் போர்வை வழங்க சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. கடும் குளிர் காரணமாக சிறையில் நடிகர் தர்ஷன் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அவருக்கு ஒரே ஒரு போர்வை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குளிரால் அந்த போர்வையை போர்த்தி அவரால் தூங்க முடியவில்லை. எனவே கூடுதலாக போர்வை வழங்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தர்ஷன் முறையிட்டு உள்ளார். ஆனால் அதிகாரிகள் போர்வை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கொலை வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட அனைவரும் காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தர்ஷன், சிறையில் கடும் குளிர் நிலவி வருகிறது. தனக்கு கூடுதல் போர்வை வழங்கும்படி அதிகாரிகளிடம் கேட்டும், அவர்கள் தர மறுக்கிறார்கள். எனது குடும்பத்தினர் கொண்டு வந்த போர்வையையும் அவர்கள் தர மறுக்கிறார்கள் என்று முறையிட்டார்.
இதையடுத்து நீதிபதி, சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தார். மேலும் தற்போது குளிர் நிலவும் நிலையில், போர்வையை தர முடியாது என அதிகாரிகள் எப்படி மறுக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, உடனடியாக தர்ஷனுக்கு கூடுதல் போர்வை வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பு வக்கீல், குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 264-ன் கீழ் சில ஆவணங்களை அதிகாரபூர்வமாக ஆதாரமாக பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. ஆனால் இதற்கு தர்ஷன் தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.






