பாடல்களின் உரிமையை எப்போதும் தயாரிப்பாளர்களிடம் வழங்கியதில்லை - இளையராஜா


பாடல்களின் உரிமையை எப்போதும் தயாரிப்பாளர்களிடம்  வழங்கியதில்லை  - இளையராஜா
x
தினத்தந்தி 6 Nov 2025 7:27 PM IST (Updated: 21 Nov 2025 11:38 AM IST)
t-max-icont-min-icon

படத்தின் ஒட்டுமொத்த உரிமை தயாரிப்பாளரிடம் இருந்தாலும் தனியாக பாடல்களை விற்க உரிமை இல்லை என்று இளையராஜா தரப்பில் கூறப்பட்டது.

பல்வேறு ஊடகங்கள் இணையதளங்கள் பல்வேறு நிறுவனங்கள் இசை நிறுவனங்கள் ஆகியவை தனது பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும், குறிப்பாக சோனி நிறுவனம் மற்றும் அதன் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய பாடல்களை மாற்றியும் பயன்படுத்தி தன்னுடைய அனுமதி இல்லாமல் பல்வேறு வடிவங்களில் அதனை மாற்றி பயன்படுத்தி வருவதாகவும் இளையராஜா தெரிவித்தார். சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாகக் கூறினாலும், அதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை உத்தரவுள்ளதாகவும் அந்த உத்தரவை மதிக்காமல் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் தன்னுடைய பாடல் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இளையராஜா தரப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இளையராஜா நோட்டிஸிற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதில் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாடல்களின் உரிமையை வைத்திருக்கும் சோனி மியூசிக் நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் ஆகியோர் தரப்புகளில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது இளையராஜா தரப்பு, “நான் இசையமைக்கும் படங்களில் இடம்பெறும் பாடல்களின் உரிமையை எப்போதும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை. படத்தின் ஒட்டுமொத்த உரிமை தயாரிப்பாளரிடம் இருந்தாலும் தனியாக பாடல்களை விற்க உரிமை இல்லை. இசையமைப்பாளர் அனுமதியின்றி பாடலை மாற்றி வெளியிடுவது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். பதிப்புரிமை சட்டப்படி இசையமைப்பாளர்களிடம் தான் பாடல் உரிமை உள்ளது” என வாதிட்டது.

பின்னர், தயாரிப்பாளர் தரப்பு, சோனி நிறுவனம் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

1 More update

Next Story