இளையராஜாவின் ஓசூர் இசை கச்சேரி... தேதி அறிவிப்பு


இளையராஜாவின் ஓசூர் இசை கச்சேரி... தேதி அறிவிப்பு
x

ஓசூரில் வரும் டிசம்பர் 14ம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து அசத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா, லண்டனில் தனது கனவு படைப்பான 'வேலியண்ட்' சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி அரங்கேற்றி உலக சாதனை படைத்தார். இசை பயணத்தில் 50 ஆண்டு பொன்விழாவையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், ஓசூரில் வருகிற டிசம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ரூ.1000 முதல் 25 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள பிகேஆர் திடலில் இசை கச்சேரி நடைபெறவுள்ளது. டிஸ்ட்ரிக்ட் செயலியில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

1 More update

Next Story