மீண்டும் சிக்கலில் ’ஜனநாயகன்’ - தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு


The JanaNayagan censorship certificate case
x
தினத்தந்தி 27 Jan 2026 10:46 AM IST (Updated: 27 Jan 2026 1:45 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது

சென்னை,

‘ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது.

பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 20-ந்தேதி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ‘ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி ஆஷாவின் உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

உரிய விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், வழக்கை விரைவாக மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தனி நீதிபதி பி.டி ஆஷாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழு மனு தக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பி.டி.ஆஷாவிடம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால் பட வெளியீடு மேலும் தள்ளிப் போகும். ஜனநாயகன் படம் இப்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை என்பதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

1 More update

Next Story