விவசாயமும் சாதனைதான் - இந்திரா


தினத்தந்தி 23 May 2022 5:30 AM GMT (Updated: 23 May 2022 5:31 AM GMT)

உழவு செய்வது, மூட்டை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர மற்ற வேலைகளை பெண்களே செய்கின்றனர். என்னுடைய விவசாய ஆர்வத்தைக் கண்ட கணவர் முழு விவசாயப் பணிகளையும் என்னிடமே ஒப்படைத்து விட்டார்.

"விமானம் ஓட்டுவது, விண்வெளிக்கு செல்வது போல, பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவதும் சாதனைதான்" என்கிறார் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த இந்திரா. எம்.ஏ., வரலாறு படித்து பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிய இவர், தற்போது கூட்டு பண்ணை முறையில் விவசாயம் செய்து, வெற்றிகரமான விவசாயியாக உயர்ந்திருக்கிறார்.

வேளாண்மைக் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விவசாயம் தொடர்பாக பயிற்சி அளிக்கிறார். ஆக்கப்பூர்வமான விவசாய முறைகளால் விஞ்ஞானிகள், உயர் அதிகாரிகள் போன்றோரிடம் பாராட்டும் பெற்றுள்ளார். இவரது பேட்டி…

"எனக்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. விவசாயம் குறித்து பல விஷயங்களை அப்போதே தெரிந்து வைத்திருந்தேன். படித்து முடித்து ஆசிரியையாக பணியாற்றிய போதும், எனது கவனம் எல்லாம் விவசாயத்தின் பக்கமே சென்றது. ஆகையால் விவசாயம் தொடர்பான பலவற்றையும் அறிந்து கற்றுக்கொண்டேன்.

திருமணத்திற்குப் பின்பு எனது கணவரின் 25 ஏக்கர் நிலத்தில் விவசாயப்பணியில் ஈடுபட்டேன். எங்கள் நிலத்தை ஆடு, மாடு, கோழி, மீன் என அனைத்தையும் வளர்க்கும் கூட்டுப்பண்ணையாக திட்டமிட்டு உருவாக்கினேன். இயற்கை முறையில் மாடுகளுக்குத் தீவனம் கொடுத்தேன். அதன் மூலம் தினமும் 100 முதல் 150 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்ய முடிந்தது. தயிர், மோர் எனத் தொடங்கி, தற்போது நெய் வரை உற்பத்தி செய்கிறோம்.

இப்போது எங்களிடம் 25-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் 100 கோழிகள் உள்ளன. இயற்கை முறையில் கத்தரி, வெண்டை, பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வாழை, நிலக்கடலை, எள் போன்ற பயிர்களை ஆண்டு முழுவதும் பயிரிடுகிறோம். செம்மரம், தேக்கு, மா, பலா, வாழை போன்ற பணப் பயிர்கள் மட்டுமில்லாமல் சவுக்கு, மலை வேம்பு போன்ற நாட்டு மரங்களையும் நட்டுப் பயிரிட்டு வருகிறோம்.

எங்கள் பண்ணையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றுகின்றனர்.

உழவு செய்வது, மூட்டை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர மற்ற வேலைகளை பெண்களே செய்கின்றனர். என்னுடைய விவசாய ஆர்வத்தைக் கண்ட கணவர் முழு விவசாயப் பணிகளையும் என்னிடமே ஒப்படைத்து விட்டார்.

2015-ம் ஆண்டு ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து சாகிவால் தார்பார்க்கர், காங்கிரேஜ், முர்ரா, ஜாபர் பாடி, ஓங்கோல், ரெட் சிந்தி போன்ற 400-க்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளை வாங்கி வந்தோம். 15 ஆயிரம் சதுர அடியில் பண்ணை அமைத்துப் பராமரித்து வந்தோம். அவற்றின் மூலம் ஒரு நாளுக்கு 1,200 முதல் 1,600 லிட்டர் பால் உற்பத்தி செய்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தோம். தீவன விலை ஏற்றம், பால் விலை கொள்முதல் விலை குறைவு போன்ற காரணங்களால், தற்போது மாடுகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறோம்.

30 பசுமாடுகளையும், ஆடு, கோழிகளையும் வைத்துப் பராமரித்து வருகிறோம். விவசாயப் பணியும் செய்து வருகிறோம். தற்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முதிர்ந்த மரங்கள் எங்கள் பண்ணையில் இடம்பெற்று, சிறு காடுகள் போல் காட்சி அளிக்கிறது. பாதுகாப்பான சுற்றுச்சூழல் நிலவுவதால் எங்கள் பண்ணை அமைந்துள்ள பகுதியில், சராசரியை விட மழை அளவு அதிகமாகப் பதிவாகி வருவதைக் காண முடிகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பயன் அடைந்துள்ளோம்.

எங்கள் பண்ணையில் வேளாண்மைக் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள், முன்னோடி விவசாயிகள் பார்வையிட்டு, பயிற்சி பெற்று செல்கிறார்கள். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சென்னை உயர்

நீதிமன்ற நீதிபதி பி.டி. செல்லம், காவல்துறை அதிகாரிகள், வேளாண்மை ஆராய்ச்சி மைய வல்லுநர்கள் பார்வையிட்டுப் பாராட்டி இருக்கிறார்கள்.

எங்கள் மாவட்டத்திலேயே முதல் முறையாக, 'சைலேஜ்' எனப்படும் ஊறுகாய் புல் தயார் செய்து ஆடு, மாடுகளுக்குத் தீவனமாக கொடுத்து வருகிறோம். எங்கள் பண்ணையில் விளையும் தேங்காய், காய்கறிகள், பால், தயிர், வெண்ணெய், நெய், கோழி முட்டை ஆகியவற்றை ஜெயங்கொண்டம் நகரில் தனிக் கடை ஆரம்பித்து, அதில் விற்பனை செய்து வருகிறோம்.

நேரடியாக வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள். சில சமயங்களில் விவசாய விளைபொருட்களுக்குச் சரியான விலை நிரந்தரமாகக் கிடைப்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டுப் பண்ணை முறையில் நாங்கள் விவசாயம் செய்து வருவதால், போதிய வருமானம் ஈட்டி வருகிறோம்" என்று பெருமையுடன் கூறினார் இந்திரா.

இவர், லயன்ஸ் கிளப்பின் சார்பில் 'சாதனைப்பெண்', மேதாபட்கரிடம் 'சிறந்த விவசாயி' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.


Next Story