உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள் - வைஷாலி


உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள் - வைஷாலி
x
தினத்தந்தி 19 March 2023 1:30 AM GMT (Updated: 19 March 2023 1:30 AM GMT)

அனைத்து பெண்களும், உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு உங்கள் தேடலைத் தொடங்குங்கள். உங்களுக்கு விருப்பமான துறையில், உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

"பெண்கள், குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது அக்கறை கொள்வதும், அவர்களது முன்னேற்றத்துக்கு உதவுவதும் முக்கியம்தான். அதேசமயம் உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்" என்கிறார் வைஷாலி. சென்னையில் வசிக்கும் இவர் விளம்பர மாடல், ஒப்பனைக் கலைஞர் என பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார். 'மிஸஸ் சவுத் இந்தியா 2023' போட்டியில் முதல் ரன்னர் அப் ஆக கிரீடம் சூடியவர் இவர். கடந்த ஆண்டு 'பெஸ்ட் இன்புளூயன்சர் ஆப் இன்ஸ்டாகிராம்' விருது பெற்றிருக்கிறார். அவரது பேட்டி.

"மின்னணு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள நான், தற்போது 'காற்றாலை ஆற்றல் மாற்ற அமைப்பு' தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறேன். ஒன்பது ஆண்டுகளாக தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினேன். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறேன்.

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் இயங்கி வருகிறேன். ஒப்பனை கலைஞராகவும், விளம்பர மாடலாகவும், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறேன்.

என்னுடைய பெற்றோர் இருவருமே கால்நடை மருத்துவர்கள். என் மகள் வீரசேனா யூ.கே.ஜி படிக்கிறாள். நான் ஒற்றைப் பெற்றோராக அவளை வளர்த்து வருகிறேன்.

தனிப்பட்ட காரணங்களுக்காக என் கணவர் என்னையும், குழந்தையையும் பிரிந்து சென்றார். அதன்பிறகுதான், எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தேடல் உண்டானது. என்னிடம் இருந்த திறமைகளை உணர்ந்தேன். பேராசிரியராக மட்டுமே இருந்த நான், அதன் பின்னர் பல துறைகளில் இறங்கி சாதிக்க வேண்டும் என்ற வேட்கையோடு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

பேராசிரியராக பணியாற்றிய உங்களுக்கு அழகிப் போட்டிகளின் மீது ஆர்வம் வந்தது எப்படி?

அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்தது. அதை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கணவர் என்னைப் பிரிந்து சென்ற பிறகுதான், நான் எனக்காக ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது நடந்த 'மிஸஸ். தமிழ்நாடு' அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன். அதில் வெற்றி பெற முடியாவிட்டாலும், அனுபவம் கிடைத்தது.

பின்னர் 2022-ம் ஆண்டு மற்றொரு அழகிப் போட்டியில் பங்கேற்று வென்று, தென்னிந்திய அழகிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றேன். அந்தப் போட்டியில் 'மிஸஸ். சவுத் இந்தியா 2023' முதல் ரன்னர் அப்-ஆக வந்தேன். அடுத்து 'மிஸஸ். இந்தியா' உள்ளிட்ட போட்டிகளை நோக்கி என்னுடைய பயணம் தொடரும்.

ஒப்பனைக் கலைஞராகவும், விளம்பர மாடலாகவும் உங்களுடைய அனுபவங்களைக் கூறுங்கள்?

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரும் வேலை இழக்கும் நிலை வந்தபோதுதான், 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று முடிவெடுத்தேன். எனக்கு ஒப்பனை செய்யத் தெரியும். அதையே தொழில் ரீதியாக கற்றுக் கொண்டேன். தற்போது மணப்பெண் அலங்காரத்தை செய்து வருகிறேன். இன்ஸ்டாகிராமில் என்னை அதிகமானோர் பின்தொடர்வதால், நான் பயன்படுத்தும் பொருட்களுக்கான டிஜிட்டல் விளம் பரங்களை செய்யத் தொடங்கினேன். அழகிப் போட்டியில் வென்ற பிறகு, விளம்பர மாடலாகவும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி வருகிறேன்.

மேடை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் யூடியூப் சேனல் அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

பள்ளி மற்றும் கல்லூரி காலத்திலும், பேராசிரியராக பணியாற்றியபோதும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதைப் பார்த்த பலர், தங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குமாறு கூறினார்கள். அவ்வாறுதான் நான் தொழில்முறை நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினேன். அதன் பின்புதான் யூடியூப் சேனலைத் தொடங்கினேன். அதில் என்னுடைய வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்கள், ஆரோக்கியம், அழகு உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன்.

ஒற்றைப் பெற்றோராக நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

எந்த அடையாளங்களும் இல்லாமல் ஒற்றைப் பெற்றோராக வாழும் பெண்ணின் தினசரி வாழ்க்கையே, ஒரு போராட்டமாகத்தான் இருக்கும். அவ்வாறு இருந்தும், பல துறைகளில் நான் பணியாற்றுவது பெரிய சவால்தான். என் பெற்றோரின் ஆதரவு இருப்பதாலும், நான் வீட்டில் இல்லாத நேரங்களில் அவர்கள் என் குழந்தையை கவனித்துக் கொள்வதாலும், என்னால் இவற்றை செய்ய முடிகிறது.

சமூக வலைத்தளத்தில் நான் ஏற்கனவே எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பதால், ஒற்றைப் பெற்றோர் என்பதை பலரும் கவனிக்கும் நிலை இல்லை. இருந்தாலும், சிலரிடம் எதிர்மறையான அணுகுமுறைகளை சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது.

சமூகத்துக்கு உங்கள் பங்களிப்பு என்ன?

2018-ம் ஆண்டு என்னுடைய தலைமுடி முழுவதையும் புற்றுநோயாளிகளுக்கு விக் செய்வதற்கு தானம் கொடுப்பதற்காக மொட்டை அடித்துக் கொண்டேன். அதற்காக எனக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டு கிடைத்தது. தற்போது வரை எனது கூந்தலை குட்டையாக்கிக் கொண்டு, அனைவரிடமும் முடி தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். என்னைப் பார்த்து பலரும் முடி தானம் செய்து வருகின்றனர். இது என்னுடைய மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

திருமணத்துக்குப் பிறகு கணவன், குழந்தைகள், குடும்பம் என்ற வட்டத்துக்குள்ளேயே அடங்கிவிடுவதால் பெண்களுக்கான தேடல் குறைந்துவிடுகிறது. அதனால், தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை. அனைத்து பெண்களும், உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு உங்கள் தேடலைத் தொடங்குங்கள். உங்களுக்கு விருப்பமான துறையில், உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.


Next Story