எனது தனிமையை இனிமையாக்கும் வண்ணங்கள் - ஜெயவர்த்தினி


எனது தனிமையை இனிமையாக்கும் வண்ணங்கள் - ஜெயவர்த்தினி
x
தினத்தந்தி 14 May 2023 1:30 AM GMT (Updated: 14 May 2023 1:31 AM GMT)

குழந்தைகளின் உலகம், வகுப்பறை மற்றும் பள்ளிக்குள் மட்டும் முடிந்துவிடுவது இல்லை. பள்ளிக்கு வெளியே கற்றல் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு பெரிய உலகம் உள்ளது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.

"ஆசிரியப் பணியின் மூலம் கற்றுக் கொடுப்பது மட்டுமில்லாமல், கற்றுக்கொள்ளவும் முடியும். குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன" என்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஜெயவர்த்தினி. கணினி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இவர் ஓவியர், கவிஞர், பறை இசைக் கலைஞர், ஆக்கி விளையாட்டு வீராங்கனை என்று பன்முகத் திறமைகளோடு விளங்குகிறார். பணிபுரிந்து கொண்டே தன்னுடைய தனித்திறமைகளையும் வளர்த்துவரும் ஜெயவர்த்தினி, அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஓவியத்திற்காக வளர்மணி விருது, தூரிகைச் சுடர்மணி விருது, கலா ரத்னா தேசிய அளவிலான விருது, எழுச்சிக் கவிஞர் விருது, மாரல் கலை ரத்னா விருது, ஏகலைவன் விருது, சிங்கப் பெண்ணே விருது, உலக சாதனை விருது, கேலிச்சித்திரம் சிறப்பு விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். அவரது பேட்டி.

"என்னுடைய அம்மா ஓவிய ஆசிரியர். எனது உறவினர்கள் பலரும் ஆசிரியப் பணியில் இருந்தவர்கள். அவர்களைப் பார்த்து எனக்கும் சிறுவயதில் இருந்தே ஆசிரியை ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் கணினித் துறையில் பட்டம் பெற்று, ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறேன். ஒரு தனியார் பள்ளியில் கணினி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். அதுமட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஓவியக் கலையையும், பறை இசையையும் என்னுடைய பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறேன்.

ஓவியங்கள் வரைவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பற்றி சொல்லுங்கள்?

என்னுடைய பெற்றோர் இருவருமே ஓவியம் வரைவதில் கைத்தேர்ந்தவர்கள். அவர்கள் மூலமாகத்தான் வரைவதற்கு கற்றுக் கொண்டேன். மனித முகங்களை வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். உள்ளத்தில் உள்ள உணர்வுகளை ஓவியமாக வெளிப்படுத்துவது எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது. நான் வரைந்த ஓவியங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டபோது, பல ஓவியக் கலைஞர்கள் அதைப் பார்த்து என் ஓவியத் திறமையை மேம்படுத்திக்கொள்வதற்கு வழிகாட்டினார்கள். எனது ஓவியங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஓவியம் வரைவதை தொழிலாக செய்ய ஆரம்பித்தேன்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நேரத்தில் நண்பர்கள், உறவினர்களை சந்திக்க முடியாமல் தனிமையை உணர நேர்ந்தது. வண்ணங்களும், ஓவியங்களும் எனது தனிமையை போக்கின. எனக்குள் இருந்த ஓவியத் திறமையை அந்த நேரத்தில் முழுமையாக வெளிப்படுத்தினேன். தொழில்நுட்ப வளர்ச்சி ஓவியத் துறையில் மாபெரும் மாறுதல்களை ஏற்படுத்தி இருந்தாலும், கைகளால் வரையும் ஓவியங்களுக்கு இப்போதும் வரவேற்பு இருக்கிறது. மனதுக்கு பிடித்த செயலை செய்யும்போது சோர்வு தெரியாது. சில நேரங்களில் விடியற்காலை 3 மணி வரையிலும்கூட ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். வண்ணங்கள் எனது இரவுகளை அழகாக்குகின்றன. ஓவியப் போட்டிக்குச் செல்லும் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, கோடைகால சிறப்பு ஓவிய வகுப்புகள் எடுப்பது போன்றவற்றையும் இலவசமாக செய்து வருகிறேன்.

கவிஞராகவும், விளையாட்டு வீராங்கனையாகவும் உங்கள் பயணம் குறித்து சொல்லுங்கள்?

கவிதைகள் எழுதுவதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. ஓவியங்களைப் போல, கவிதையும் ஒருவரின் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தக் கூடியது. தமிழ்மொழியின் மீது கொண்ட பற்று காரணமாக தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறேன். எனது கவிதைகளை தொகுத்து 'அவளதிகாரம்' என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன்.

எனக்கு அதிகமாக கோபம் வரும். அதை மாற்றிக்கொள்வதற்கான வழியாகவே விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன். ஆக்கி விளையாட்டில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.

பறை இசையின் மீது நீங்கள் காதல் கொண்டது எப்போது?

என்னுடைய தந்தையின் மறைவு எனக்கு பறை இசையை அறிமுகப்படுத்தியது. சத்தம் என்பதே பிடிக்காத எனக்குள், பறை இசை ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியது. கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடை இல்லை. பறை கற்றுக்கொண்டு இன்று பல நிகழ்ச்சிகளிலும் இசைத்து வருகிறேன். இசை அனைவருக்கும் சொந்தமானது. அதை அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதற்கு என்னுடைய ஆசிரியப் பணி உதவுகிறது.

நமக்குப் பிடித்தவர்கள் நம்மை விட்டு மறையும்போது, அவர்கள் நேசித்ததை நாமும் நேசித்தால் 'அவர்கள் நம்முடன் இல்லை' என்ற உணர்வு தோன்றாது. இதை உணர்ந்ததால், எனக்குப் பிடித்தவர்களிடம் இருந்து ஒவ்வொன்றையும் கற்று வருகிறேன்.

எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பதும், நேர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் பழகுவதும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழியாகும். 'நமக்குப் பிடித்த செயல்களில் கவனத்தோடு ஈடுபட்டால், அவையே நமது அடையாளமாக மாறும்' என்று எனது மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்.

கோடை விடுமுறைக்கான டிப்ஸ்

நீண்ட கோடை விடுமுறை நாட்களில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சமாளிப்பது பெற்றோருக்கு சற்றே கடினமான செயல்தான். ஆனால் வகுப்புகள், வீட்டுப்பாடங்கள், தேர்வுகள், போட்டிகள் போன்றவை பல குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன. அதில் இருந்து விடுபட்டு உடலையும், மனதையும் புத்துணர்வு அடையச் செய்வதற்கு இந்த விடுமுறை காலம் அவர்களுக்கு உதவும். இதன் மூலம் அவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு தங்களை எளிதாக தயார் படுத்திக்கொள்வார்கள்.

குழந்தைகளின் உலகம், வகுப்பறை மற்றும் பள்ளிக்குள் மட்டும் முடிந்துவிடுவது இல்லை. பள்ளிக்கு வெளியே கற்றல் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு பெரிய உலகம் உள்ளது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே அந்த அனுபவங்களையும் அறிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு கோடை விடுமுறை நாட்கள் ஏற்றதாக இருக்கும்.

குழந்தைப் பருவம், குறிப்பாக டீன் ஏஜ் வயது படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான காலமாகும். கதை, கவிதை, இசை, நடனம், ஓவியம், விளையாட்டு மற்றும் நல்ல திரைப்படங்கள் பார்ப்பது என அவர்களுக்கு பிடித்த செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்து வதற்கு இந்த விடுமுறைக் காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


Next Story