வில்லுப்பாட்டில் வியக்க வைக்கும் மாதவி


வில்லுப்பாட்டில் வியக்க வைக்கும் மாதவி
x
தினத்தந்தி 9 July 2023 1:30 AM GMT (Updated: 9 July 2023 1:30 AM GMT)

நான் வில்லுப்பாட்டு கலையில் ஈடுபட ஆரம்பித்து 4 வருடங்கள்தான் ஆகிறது. இன்னும் சில வருடங்கள் இந்தக் கலை சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வில்லுப்பாட்டில் ஈடுபடும் ஆறு கலைஞர்களும் பெண்களாக இருப்பது வியக்கத்தக்க விஷயம். வருங்காலத்தில் இதை நிச்சயமாக செய்து காட்டுவேன்.

மிழரின் கலாசாரத்தைப்போல, தமிழ் கலைகளும் இயற்கையோடு இணைந்தவை. எளிமையும், இனிமையும் நிறைந்த அவை எவரையும் ஈர்க்கும் இயல்பு கொண்டவை. அந்தவகையில், வேட்டையாடி வாழ்ந்த நமது முன்னோர்கள், காடுகளில் அலைந்து திரிந்த அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக, வேட்டைக்கு பயன்படுத்திய வில்லை வைத்தே பொழுதுபோக்காக பாடி மகிழ்ந்த கலைதான் வில்லுப்பாட்டு.

கிராமிய கலைகளுள் ஒன்றாக அறியப்படும் வில்லுப்பாட்டு, கோவில் திருவிழாக்களில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. காலமாற்றத்துக்கு ஏற்றவாறு மக்களின் ரசனைகளும் மாறியதால், அழிவின் விளிம்பில் இருந்த இந்தக் கலை தற்போது பலரது முயற்சியால் புத்துயிர் பெற்றுள்ளது. அந்தவகையில் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படியாக வில்லுப்பாட்டை வழங்கி வருகிறார், தென்காசியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மாதவி.

'தனது வாழ்நாள் லட்சியமே வில்லுப்பாட்டு பாடுவதுதான்' என்று கூறும் மாதவியின் வில்லிசை வீடியோக்கள், யூடியூப்பில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அவருடன் ஒரு சந்திப்பு…

"தென்காசி, சுரண்டை அருகில் உள்ள அச்சங்குன்றம் எனது சொந்த ஊர். சில மாதங்களுக்கு முன்புதான் தொலைதூர கல்வி வழியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்தேன். என்னுடைய அப்பா மாரிசெல்வம், கட்டிட வேலை செய்கிறார். அம்மா, மாலதி பீடி சுற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

எங்கள் ஊர்த்திருவிழாவில் வில்லுப்பாட்டு கச்சேரி நடத்த வரும் கலைஞர்கள், எங்கள் வீட்டில் விருந்து உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு வரும்போது அவர்கள் வில்லுப்பாட்டு பாடுவார்கள். குடும்பத்தினரோடு சேர்ந்து நானும் அதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். இவ்வாறு சிறுவயதில் இருந்தே வில்லுப்பாட்டை ரசித்தபடிதான் வளர்ந்தேன்.

ஒருநாள் குடும்பத்தினர் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது எனது தாத்தாவும், மாமாவும் "நமது வீட்டிலும் யாராவது வில்லுப்பாட்டு பாடினால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்கள். அதைக் கேட்ட எனக்கு 'நாமும் வில்லுப்பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வந்தது.

எனது விருப்பத்தை புரிந்துகொண்ட குடும்பத்தினர் எனக்கு ஆதரவு அளித்தனர். அதன்படி எங்கள் ஊரைச் சேர்ந்த வி.கே.புதூர் இசக்கி புலவர், வல்லம் மாரியம்மாள், கடையநல்லூர் கணபதி புலவர் ஆகியோரிடம் வில்லிசை பயின்றேன். இதுவரை 300-க்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு கச்சேரிகளை நடத்தி இருக்கிறேன். சில நேரங்களில் நள்ளிரவு நேரம் கடந்தும் கச்சேரி நடக்கும்.

வில்லுப்பாட்டில் அசத்தி வரும் நீங்கள் கல்விக்கு எவ்வாறு நேரம் ஒதுக்குகிறீர்கள்?

ஆரம்ப காலத்தில் விடுமுறை நாட்களில் மட்டும் வில்லுப்பாட்டு கற்றுக் கொண்டேன். சில சமயங்களில் எனது குருவின் காலச் சூழ்நிலையை பொறுத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்து வில்லுப்பாட்டு கற்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது வில்லுப்பாட்டு மீது நான் கொண்ட ஆர்வத்தால் முழுவதுமாக அதில் கவனம் செலுத்தி வருகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால், தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் படித்து வருகிறேன்.

நள்ளிரவு நேரங்களில் வில்லுப்பாட்டு கச்சேரி செய்யும்போது உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது?

கச்சேரி முடிந்து பெரும்பாலும் நள்ளிரவு கடந்த பின்புதான் வீடு திரும்ப முடியும். கச்சேரிக்கு செல்வதில் தொடங்கி வீடு திரும்பும் வரை, எப்போதும் என்னுடைய குழுவினர் எனக்கு பாதுகாப்பாக உடன் இருப்பார்கள். கச்சேரி முடிந்து என்னை பத்திரமாக வீட்டில் சேர்த்த பின்பே அவரவர் இல்லங்களுக்கு செல்வார்கள்.

வில்லுப்பாட்டுக்கு மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?

வில்லுப்பாட்டை பற்றிய மக்களின் மனநிலை தற்போது மாறியுள்ளது. இந்த மாற்றத்தை நானே பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். முன்பெல்லாம் வில்லுப்பாட்டு ஆன்மிகம் சார்ந்தது, அதை கோவில்களில் மட்டுமே பாடுவார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது வில்லுப்பாட்டு கலையின் மீது பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வில்லுப்பாட்டை புதுமையாகக் கருதி ரசிக்கிறார்கள். ரசிப்பது மட்டுமில்லாமல் இந்தக் கலையை கற்றுக்கொள்ளவும் பலர் ஆர்வத்துடன் முன்வருகிறார்கள்.

வில்லுப்பாட்டில் என்னென்ன கருவிகளை பயன்படுத்துகிறீர்கள்?

வில்லுப்பாட்டில் வில்லுக்கே முதன்மை இடம். அதுதவிர குடம், உடுக்கு, தாளம், கட்டை, வீசுகோல் ஆகிய ஐந்து கருவிகளும் இசைக்கு ஏற்ற வகையில் வில்லுடன் சேர்த்து பயன்படுத்தப்படும்.

வில்லுப்பாட்டு மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் என்ன செய்கிறீர்கள்?

வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கும்போது இடையிடையே குடும்பம், உறவுகள், பொருளாதாரம், இயற்கை மருத்துவம், ஆரோக்கியம், அழகு ஆகிய அன்றாட வாழ்வியலுக்கு தேவையான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுவேன். ஒவ்வொரு முறை கச்சேரிக்கு செல்வதற்கு முன்பும் நாட்டு நடப்பு, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியம், முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பொருட்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி ஆன்லைன் மற்றும் புத்தகங்கள் வாயிலாக படித்து தெரிந்துகொள்வேன். அவ்வாறு எனக்கு கிடைக்கும் தகவல்களை கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

உங்களைப்போல, இளம் பெண்கள் வில்லுப்பாட்டில் ஆர்வம் காட்டுகிறார்களா?

இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் வில்லுப்பாட்டுக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரும், உறவுகளும் ஆதரவு அளித்தால் நிச்சயமாக இந்தக் கலையில் பெண்களின் வருகை அதிகரிக்கும்.

முழுவதும் பெண் கலைஞர்கள் கொண்ட வில்லுப்பாட்டுக் குழுவை உருவாக்கும் எண்ணம் இருக்கிறதா?

அதுதான் என்னுடைய மிகப்பெரிய ஆசை. வில்லுப்பாட்டில் ஈடுபடும் ஆறு கலைஞர்களும் பெண்களாக இருப்பது வியக்கத்தக்க விஷயம். வருங்காலத்தில் இதை நிச்சயமாக செய்து காட்டுவேன்.

வில்லுப்பாட்டு கற்றுக்கொடுக்கும் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் எண்ணம் இருக்கிறதா?

நான் வில்லுப்பாட்டு கலையில் ஈடுபட ஆரம்பித்து 4 வருடங்கள்தான் ஆகிறது. இன்னும் சில வருடங்கள் இந்தக் கலை சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வில்லுப்பாட்டு குறித்து என்னிடம் யார் சந்தேகம் கேட்டாலும், என்னால் தயக்கமின்றி பதில் அளிக்க முடியும். ஆகையால் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு தனியாக பயிற்சி வகுப்பு தொடங்குவேன்.

மக்களிடம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் குறித்து சொல்லுங்கள்?

வில்லுப்பாட்டு கச்சேரி நடத்துவதற்காக ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும், அங்குள்ள மக்கள் என்னை தங்கள் வீட்டுப் பெண் போல நினைத்து வரவேற்கிறார்கள். தங்கள் குடும்பத்தோடு வந்து என்னுடைய வில்லுப்பாட்டை ரசிக்கிறார்கள். இது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.


Next Story