அதிக லாபம் தரும் 'டஸ்ட்பின் கவர்' தொழில்


அதிக லாபம் தரும் டஸ்ட்பின் கவர் தொழில்
x
தினத்தந்தி 30 Oct 2022 1:30 AM GMT (Updated: 30 Oct 2022 1:30 AM GMT)

‘டஸ்ட்பின் கவர்’ தொழிலை இரண்டு விதங்களில் மேற்கொள்ளலாம். ஒன்று நாமே தயாரித்தல், மற்றொன்று தயாரிப்பு நிறுவனத்தில் மொத்த விலைக்கு வாங்கி அவற்றை சந்தைப்படுத்துதல்.

ய்வு நேரத்தில் சிறு தொழில்கள் செய்வது இல்லத்தரசிகள் மற்றும் படிக்கும் பெண்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இதில் அன்றாடம் உபயோகப்படும் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது லாபம் தரும். அந்த வகையில் வீடுகள், அலுவலகங்கள், விடுதி மற்றும் உணவகங்களில் தினமும் பயன்படுத்தப்படும் குப்பைக் கூடைகளில் பொருத்தப்படும் கவர் தயாரிப்பு குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

'டஸ்ட்பின் கவர்' தொழிலை இரண்டு விதங்களில் மேற்கொள்ளலாம். ஒன்று நாமே தயாரித்தல், மற்றொன்று தயாரிப்பு நிறுவனத்தில் மொத்த விலைக்கு வாங்கி அவற்றை சந்தைப்படுத்துதல். இதில் நாமே டஸ்ட்பின் கவரை தயாரிப்பதற்கு சற்று கூடுதல் செலவு ஏற்படும். இருப்பினும், ஒரு முறை செலவு செய்து தயாரித்தால், தொடர்ந்து லாபம் பெற முடியும். இதன் தயாரிப்புக்கு தனி அறை அல்லது இடம் தேவைப்படும். ஒன்று அல்லது இரண்டு உதவியாளர்கள் தேவை.

டஸ்ட்பின் கவர் தயாரிப்பு இயந்திரம் ரூ.4 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. தயாரிப்பு மற்றும் தொழில் அளவைப் பொறுத்து இயந்திரத்தை தேர்வு செய்வது நல்லது.

டஸ்ட்பின் கவர் தயாரிப்பு இயந்திரம் மூலம் தொழில் தொடங்க நினைப்பவர்கள் கூட்டுறவு வங்கிகள் அல்லது மகளிர் சுயதொழில் திட்டங்கள் மூலம் கடன் உதவி பெற முடியும்.

மற்றொரு வழி டஸ்ட்பின் கவர் தயாரிப்பில் ஈடுபடாமல், விற்பனை மட்டும் செய்யலாம். மொத்த விலையில் வாங்கி விற்கும்போது முதலீடும், சந்தை அபாயமும் குறைவு. ஆனால் லாபம் அதிகம். குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும்.

மொத்தமாக அதிக அளவில் வாங்கும்பொழுது 45 ரூபாய் விலைக்கு கிடைக்கும். இதை மொத்த விலையிலும், சில்லரையாகவும், ஆன்லைனிலும் சந்தைப்படுத்தலாம். ஒரு சுருள் டஸ்ட்பின் கவரை 150 முதல் 200 ரூபாய் வரை விற்கலாம். டஸ்ட்பின் கவரின் உயரம் மற்றும் கொள்ளளவை பொறுத்து அதன் விலையும் மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இவ்வாறு மொத்த விலையில் வாங்கி அவற்றை மறுவிற்பனை செய்யும்போது தினமும் ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதே தொழில் முறையை வீட்டுத்தோட்டத்துக்குப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கும் பின்பற்றலாம். இவற்றை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்.


Next Story