இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. கல்லூரி நண்பனை 9 ஆண்டுகள் காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டேன். ஒரு வருடத்துக்கு பின்பு என்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தவன், திடீரென்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். நான் எவ்வளவோ முயன்றும் என்னுடன் சேர்ந்து வாழ வரவில்லை. பெற்றோர் வீட்டுக்கு செல்ல விரும்பாத நான், ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறேன். கடந்த 2 வருடங்களாக தனியாக வாழ்கிறேன். இப்போது, என்னுடன் பணியாற்றும் நபர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். எனக்கு அவரை பிடித்திருந்தாலும், என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. பல வருடம் பழகியவனே பாதியில் சென்ற பிறகு, சில மாதங்கள் பழகியவரை எந்த விதத்தில் நம்புவது? உங்கள் ஆலோசனைக்கு காத்திருக்கிறேன்.
முந்தைய திருமண உறவில் உங்களின் எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக இருந்திருக்கலாம். காதலில் ஒருவருக்கு ஆர்வம், நெருக்கம் மற்றும் அர்ப்பணிப்பு தேவை. முந்தைய உறவில் இருவரும் இவற்றை தவற விட்டிருக்கலாம். தற்போது உங்கள் வயதும், அனுபவமும் உங்களை மேலும் முதிர்ச்சியாகவும், பொறுமையாகவும் சிந்திக்க வைக்கும். இப்போது உங்களுடன் வாழ விருப்பம் தெரிவித்த நபரிடம்,
நீங்கள் எதிர்பார்க்கும் குணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயுங்கள். அவருடைய பின்னணியைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு இதற்கு முன்பு திருமண உறவு இருந்ததா? எனில் அது ஏன் முறிந்தது? போன்றவற்றுக்கு நிதானமாக விடை அறியுங்கள். வாழ்க்கை எல்லா நேரத்திலும் தோற்றுவிடாது. எனவே பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் முடிவு எடுங்கள்.
2. நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறேன். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது, எங்கள் குடும்ப நண்பர் ஒருவரோடு எனது அம்மா தவறான உறவில் இருந்ததை பார்த்துவிட்டேன். அன்றில் இருந்து இப்போது வரை, என் அம்மாவுடன் நான் சரியாக பேசுவது இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு, அந்த நபர் எங்கள் வீட்டுக்கு வருவது இல்லை. என் அம்மா எப்போதும் போல, எனது அப்பாவுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வருகிறார். ஆனால், என்னால் அவரை பழையபடி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். இது ஒவ்வொரு நாளும் வேதனையைத் தருகிறது. எனக்கு நல்ல வழிகாட்டுங்கள்.
உங்கள் தாய் தனது கடந்த காலத்தை மறந்து தந்தையுடன் நல்ல முறையில் வாழ்கிறார் என்றால், அவர் தனது தவறை உணர்ந்து திருந்தி இருக்கலாம். யாராக இருந்தாலும் தவறு செய்வது இயல்பு. அதை உணர்ந்து அவர்கள் திருந்தி வாழ முற்படும்போது, மன்னிப்பதே சிறந்தது. அவரது உணர்வுகளை மதித்து, அவரை மன்னிக்க முயற்சிக்கவும். ஒருவேளை அதில் உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், உங்களுடைய கோபத்தையும், வெறுப்பையும் போக்குவதற்கான வழியாக அவரை மன்னித்துவிடுங்கள். இதன்மூலம் நீங்கள் அதிர்ச்சி மன நிலையில் இருந்து வெளிவருவீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இது உங்கள் தவறு இல்லை. நீங்கள் மகிழ்ச்சியாக வாழத் தகுதியானவர். கடந்த காலத்தை எண்ணி, உங்கள் நிகழ்கால நிம்மதியை தொலைக்காதீர்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.