இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இதுவரை ஒரு முறை கூட நானும், கணவரும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவில்லை. எப்போது அவரை அணுகினாலும் ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துவிடுவார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவரை சம்மதிக்க வைத்து மருத்துவ ஆலோசனை பெற்றோம். மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சைப் பெற்று வந்தவர், சில நாட்களிலேயே அதை நிறுத்திவிட்டார். காரணம் கேட்டால் என்னை கீழ்த்தரமாக பேசுகிறார். இந்த நிலையில் நான் என்ன செய்வது? தங்கள் வழிகாட்டுதல் தேவை.
உடல் மற்றும் மனம் தொடர்பான பிரச்சினைகளால் சிலருக்கு தாம்பத்தியத்தின் மீது ஆர்வமின்மை ஏற்படும். விறைப்புத்தன்மை இல்லாதது, முன்கூட்டிய அல்லது தாமதமாக விந்து வெளியேறுதல் போன்ற உடலியல் சார்ந்த பிரச்சினைகளுக்காக மருத்துவர் உங்கள் கணவரை சிகிச்சைக்கு உட்படுத்தி இருக்கலாம். ஆனால் உங்கள் கணவர் மருந்துகளை நிறுத்தியிருப்பது, அவருக்கு இந்த உறவில் ஆர்வம் இல்லாததைக் காட்டுகிறது. எனவே, இதற்கு உளவியலாளரின் ஆலோசனையைப் பெறுவது முக்கியம். உங்கள் கணவருக்கு இதில் விருப்பம் இல்லையென்றால், நீங்கள் தனியாக உளவியலாளரை சந்தித்து விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான தெளிவைப் பெறுவது சிறந்தது.
2. எனக்கு வயது 36. கணவர், குழந்தைகள், மாமியார், மாமனாரோடு வசித்து வருகிறேன். குடும்பத்தினருக்கு வேண்டிய எல்லாவற்றையும் தவறாமல் செய்கிறேன். ஆனால், வீட்டில் யாராவது சின்ன தவறு செய்தாலும், என்னை மீறி அவர்களை கோபமாக கடிந்து கொள்கிறேன். இதனால், அனைவரும் மனதளவில் காயப்படுகிறார்கள். எனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நேரங்களில் இதனால் கணவருக்கும், எனக்கும் கருத்துவேறுபாடு உண்டாகிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன வழி?
கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து ஒவ்வொருவரின் தேவைகளையும் கவனிப்பது எளிதான காரியம் அல்ல. இதற்கு நீங்கள் அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டும். இதனால் உங்கள் உடலும், உள்ளமும் சோர்வடைய நேரிடலாம். சில நேரங்களில் நீங்கள் ஒருவர் மட்டுமே மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்யாமல் இருப்பதுமான சூழ்நிலையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அத்தகைய நிலையில் நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது, உங்கள் சகிப்புத்தன்மை குறைந்துவிடும். இதனால் மற்றவர்கள் சிறிய தவறுகளை செய்தாலும் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முதலில் சிறிய இடைவெளிகள் எடுத்து உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றுங்கள். மற்றவர்களை கவனிப்பதற்கு முன்பு தங்களைப் பற்றிய சுய அன்பும், அக்கறையும் முக்கியம். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்யுங்கள். இதில் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சி மற்றும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.