இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 30 Oct 2022 7:00 AM IST (Updated: 30 Oct 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. எங்களது ஒரே மகள் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பறிவும், வேலையும் இல்லாமல் ஊர் சுற்றுபவன் மீது காதல் வசப்பட்டாள். இது தெரிந்ததும் நாங்கள் அவளுக்கு அறிவுரை கூறினோம். அதை அவள் பொருட்படுத்தவில்லை. எனவே அவளை பக்கத்து ஊரில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைத்தோம்.அங்கு சென்ற சில மாதங்களில் அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல ஆகிவிட்டாள். அவளை பழையபடி மாற்றுவது எப்படி?

பெற்றோர் மற்றும் தான் விரும்பும் நபரிடம் இருந்து திடீரென பிரிக்கப்பட்டதால், உங்கள் மகள் இத்தகைய மனநிலைக்கு வந்திருக்கலாம். அவள் தனிமையாகவும், நிராகரிக்கப்பட்டதாகவும் உணரலாம். தற்போது அவள் விடுதியில் தங்கி இருந்தாலும், அவளை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுங்கள். அவள் விருப்பப்பட்டால் அவ்வப்போது போய் சந்தித்து வாருங்கள். ஏனெனில் தான் ஒதுக்கப்பட்டதாக அவள் எந்த அளவுக்கு சிந்திக்கிறாளோ, அவ்வளவு வேகத்தில் அவளை ஏற்றுக்கொள்ளும் மற்றொரு நபரின் மேல் அவளது கவனம் திரும்பும் ஆபத்து இருக்கிறது. இது விரும்பத்தகாத உறவில் போய் முடியலாம். அவளது தற்போதைய நிலையை மாற்றுவதற்கு பொது மருத்துவரை நீங்கள் நாடலாம். அவர் அவளை பரிசோதித்து அறிந்தபின்பு, தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு பரிந்துரைப்பார்.

2. நான் தையல் வேலை செய்து சேமித்து வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, எனது கணவர் என்னைக் கேட்காமல் தனது உறவினருக்கு உதவி செய் வதற்காக கொடுத்து விட்டார். 3 வருடம் ஆகியும் அவர் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நான் என் குழந்தையுடன் தனியாக வாழ்கிறேன். அவர் பலமுறை அழைத்தும் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், தனியாக பெண் குழந்தையோடு பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற பயம் உள்ளது. எனக்கு ஆலோசனை வழங்குங்கள்.

தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் தனிமையில் வாழ்வது பாதுகாப்பானது மற்றும் சாத்தியமானது என்றாலும், அவ்வாறு செய்வதன் அவசியம் என்ன? என்பதுதான் இங்கு யோசிக்கவேண்டியது. நீங்கள் உழைத்து வாங்கிய சொத்தை, உங்கள் கணவர் இவ்வாறு செய்தது தவறுதான். என்றாலும் அவர் தனது தவறை உணர்ந்து வருந்தினால், நீங்கள் அவருக்கு அறிவுரை கூறி, 'இனி இவ்வாறு நடக்கக்கூடாது' என்ற நிபந்தனையுடன் அவரை மன்னிப்பது சிறந்தது. அவ்வாறு செய்தால் அவர் வருங்காலத்தில் அத்தகைய தவறை திரும்பவும் செய்யமாட்டார்.

உங்கள் கணவரை மன்னிக்கலாமா? வேண்டாமா? என்பதைவிட, நீங்கள் அவர் மீது உள்ள கோபத்தில் இருந்து வெளிவரவேண்டும் என்பது முக்கியம். அதற்கு அவரை மன்னிப்பதே சிறந்த வழி. அனைவருக்கும் வாழ்க்கை ஒரு முறை மட்டுமே. அதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கு நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். சிந்தித்து செயல்படுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story