இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 13 Nov 2022 7:00 AM IST (Updated: 13 Nov 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. எனக்கு காதல் திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிறது. கணவருக்கு செக்ஸ் வாழ்வின் மீது ஈடுபாடு இல்லை. இதுவரை எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடக்கவில்லை. அதுபற்றி பேசினாலே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வருவதால், நான் 'விதிப்படியே நடக்கட்டும்' என்று விட்டுவிட்டேன். ஆனால், கடந்த 2 மாதங்களாக கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் மொபைல் மூலம் செக்ஸ் தொடர்பான புகைப்படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டேன். எவ்வளவுதான் மனதைக் கட்டுப்படுத்தினாலும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதுபற்றி யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவிக்கிறேன். எனக்கு நல்வழி காட்டுங்கள்.

உங்கள் கணவர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்டாததற்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் ஒன்று மற்றொன்றுக்கு வழிவகுக்கும். ஒருவேளை உடல் சார்ந்த பிரச்சினைகளாக இருந்தால், மருத்துவரை அணுகி குணப்படுத்த முடியும். உளவியல் சார்ந்த பாதிப்புக்கு பாலியல் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு வழி காட்டும் உளவியல் ஆலோசகரை நீங்கள் இருவரும் அணுக வேண்டியது அவசியம்.

ஆனால், உங்கள் கணவர் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க கூட விரும்பவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது அவருக்கு திருமண உறவில் நாட்டம் இல்லாததைக் காட்டுகிறது.

எனவே நீங்கள் அவர் இல்லாமல் உளவியலாளரை சந்திக்கவும். விஷயங்களை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்து அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.

அதைத் தவிர்த்து நீங்கள் ஆபாச புகைப்படங்களைப் பார்த்து ரசிப்பது, உங்களின் பாலியல் தூண்டுதலுக்கு தற்காலிக வடிகாலாக மட்டுமே அமையும். துணையுடன் பாலியல் செயல்பாடுகள் மூலம் மன நிறைவு பெற்றால், இவற்றில் உங்கள் கவனம் செல்லாது. அவ்வாறு செய்ய வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர மாட்டீர்கள்.

எனவே, உங்கள் நடத்தையில் குற்ற உணர்ச்சியை உணராதீர்கள். அதற்கு பதிலாக சரியான தருணத்தில் உங்கள் கணவரிடம் பக்குவமாக பேசுங்கள். நீங்கள் அவருக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உடலுறவு என்பது திருமணத்தின் ஒரு முக்கிய அங்கம். பாலியல் தூண்டுதல்கள் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் பொதுவானது.

நீங்கள் தகுதியான ஒன்றைத்தான் கேட்கிறீர்கள். 5 ஆண்டுகள் என்பது நீண்ட காத்திருப்பு. தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க முயற்சி செய்யுங்கள்.

2. கொரோனா பரவல் பற்றிய அச்சம் தெளிந்து, அனைவரும் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிய பின்னும் கூட எனது மாமியார் அதில் இருந்து மீண்டு வரவில்லை. தற்போதும் அது பற்றிய பயத்திலேயே இருக்கிறார். அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தங்கள் ஆலோசனை தேவை.

கொரோனா நோயை விட அதைப் பற்றிய பயமே ஆபத்தானது. தற்போது அனைவரும் அதற்கு எதிரான தடுப்பூசிகளை போட்டு இருக்கின்றனர். எனவே நோய் தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை. எனினும் வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. முதுமை காரணமாக அவருக்கு அச்சமும், பதற்றமும் உண்டாவது இயல்பானதே. தொடர்ந்து அதைப் பற்றி வீட்டில் பேசுவதைத் தவிர்க்கவும்.

அவரது கவனத்தை திசை திருப்பும், மகிழ்ச்சிப்படுத்தும் செயல்பாடுகளில் அவரை ஈடுபட செய்யலாம். இரவில் ஆழ்ந்த தூக்கம், சத்துள்ள உணவுகள், மிதமான உடற்பயிற்சி போன்றவை அவருக்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள். அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவுகளுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story