இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. நான் தனியார் வங்கியில் பணியாற்றுகிறேன். எனது அப்பா என்னுடைய குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டார். நானும், என் அம்மாவும் உறவினர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். என்னுடன் பள்ளியில் படித்த வேற்று மதத்தைச் சேர்ந்த மாணவனை எட்டு வருடங்களாக காதலிக்கிறேன். எங்கள் காதலை எனது வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பலமுறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறேன். எனது அம்மாவின் வளர்ப்பு தவறாகிவிடும் என்பதால் அதை தவிர்த்துவிட்டேன். காதலையும், அம்மாவையும் விட்டுக்கொடுக்க முடியாமல் நடைப்பிணமாக வாழ்கிறேன். எனது கண்ணீருக்கு தீர்வு சொல்லுங்கள்.
மிகவும் இளம் வயதில் நீங்கள் உங்கள் தந்தையை இழந்ததால், நீங்கள் காதலிக்கும் நபரில் உங்கள் தந்தையை காணும் பொருட்டு, அவர் மேல் உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
உங்கள் தாயார் உங்களுடைய காதலை மதத்தின் காரணமாக மட்டும் ஏற்கவில்லையா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்று ஆராயுங்கள்.
இது தொடர்பாக உங்கள் காதலரின் நிலைப்பாடு என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். அவரை திருமணம் செய்துகொள்ள முடியவில்லையே என்று ஆதங்கப்
படுவதை சற்று தள்ளி வையுங்கள். நடைமுறை வாழ்க்கையில் அவர் உங்களுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருப்பாரா என்று யோசியுங்கள்.
நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போது அதை சமாளிப்பதற்காக யோசிப்பதே தற்கொலை செய்யும் முடிவு. பிரச்சினைகளை சமாளிக்கும் பொறுமை உங்களிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
எந்த ஒரு திருமணத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வருவது இயல்புதான். அதற்கு நிதானமாக இருந்து யோசித்து தீர்வு காண வேண்டும். உங்கள் காதலரை நீங்கள் திருமணம் செய்தாலும், அந்த வாழ்க்கையிலும் ஏதேனும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். அப்படியானால் ஒவ்வொரு நெருக்கடியான நேரத்திலும் தற்கொலை முயற்சி செய்வீர்களா? அது உங்கள் கணவருக்கும், குழந்தைகளுக்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய அநீதியாக இருக்காதா?
விரக்தியையும், துன்பத்தையும் சமாளிக்கும் நிதானம் உங்களிடம் இல்லாவிட்டால், காதலரை மட்டுமில்லாமல், வேறு எந்த நபரையும் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். தற்கொலை செய்து கொள்ள நினைத்தால், நீங்கள் உங்களை நேசிக்கவில்லை என்று அர்த்தமாகும். தன்னை நேசிக்காத நபரால் மற்றவரையும் நேசிக்க முடியாது.
உங்கள் காதலரை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? என்பதை முதலில் சிந்தியுங்கள். அப்படி என்றால் உங்கள் திருமணத்தை உங்களுடைய தாய் ஏற்றுகொள்ளும்வரை காத்திருங்கள். உங்கள் இருவரின் உறவின் உறுதிப்பாட்டை நம்புங்கள். அப்போது உங்கள் காதலின் நேர்மையை உங்களுடைய தாயால் உணர முடியும். அதை ஏற்றுக்கொள்வதற்கு அவருக்கு போதுமான அவகாசம் கொடுங்கள். அப்போது எல்லாம் சுபமாக நடக்கும்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.