இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 27 Nov 2022 7:00 AM IST (Updated: 27 Nov 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. நான் கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறேன். பெற்றோருக்கு ஒரே மகள். சில வருடங்களுக்கு முன்பு எனது பெற்றோர் ஒரு சிறுவனை தத்தெடுத்தனர். அவனுக்கு இப்போது 10 வயது. அவன் வந்த பின்னர் எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துவிட்டனர். இதனால் அவன் மீதும், என் பெற்றோர் மீதும் வெறுப்பு உண்டாகிறது. அவர்களை விட்டு தனித்து வாழலாம் என்று தோன்றுகிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் திருமணம் செய்து கணவர் வீட்டுக்கு சென்ற பின்னர் உங்கள் பெற்றோர் தனிமையை உணரக்கூடும். அந்த நேரத்தில் தங்களுக்கு ஆதரவாக இருப்பான் என்ற எண்ணத்தில், அவர்கள் அந்த சிறுவனை தத்தெடுத்து இருக்கலாம் என்று கருதுகிறேன். ஒற்றை மகளைக் கொண்ட எல்லா பெற்றோரும் இவ்வாறு நினைப்பது பொதுவானது. தங்களுக்கு வயதாகும் நேரத்தில், தங்களிடம் அன்பு காட்டுவான் என்பதற்காக அவனுக்கு கூடுதல் அன்பை செலுத்த அவர்கள் முயற்சி செய்யலாம்.

நீங்கள் பல ஆண்டுகளாக ஒற்றைப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்கள் பெற்றோரின் அன்பை முழுமையாக அனுபவித்தீர்கள். திடீரென்று அதைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் வரும்போது அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் இந்த நிலையை நீங்கள் மற்றொரு விதத்தில் பார்ப்பது நல்லது. உங்கள் பெற்றோர் உங்களை விட அவருக்கு அதிக அன்பை செலுத்துகிறார்களா? எனும் கேள்வியை, உங்களை நீங்களே கேட்டு அதற்கு நேர்மையான பதிலளிக்கவும். தவறான கருத்துக்கள் உங்கள் முடிவுகளை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் பெற்றோரிடம் இருந்தும், அந்தக் குழந்தையிடம் இருந்தும் விலகிச் செல்ல முடிவு செய்வதற்கு முன்பு இதைப் பற்றி முதலில் தெளிவுபடுத்துங்கள். உறவுகளை இழப்பது எளிது, ஆனால் பெறுவது கடினம். புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள்.

2. காதல் திருமணம் செய்த எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் சிறப்பு குழந்தை. 11 வயது ஆகும் அவனால் தனித்து செயல்பட முடியாது. இளையவனுக்கு 5 வயது ஆகிறது. குறும்புத்தனம் மற்றும் சுறுசுறுப்பு நிறைந்த அவன், சில நேரங்களில் மூத்தவனின் செய்கைகளைப் பார்த்து அவனைப் போலவே நடந்து கொள்கிறான். ஆரம்பத்தில் விளையாட்டாக செய்கிறான் என்று நினைத்தேன். ஆனால், தொடர்ந்து அவ்வாறே நடந்துகொள்கிறான். அவனை எவ்வாறு மாற்றுவது?

உங்கள் இளைய மகன் சிறு குழந்தையாக இருப்பதால், தனது மூத்த சகோதரனின் நிலையை அவனால் புரிந்துகொள்ள முடியாது. தனது மூத்த சகோதரனை மட்டுமே கவனித்து அவனது நடத்தையைப் பின்பற்றுகிறான். இதைத் தடுக்க அவனது வயதுடைய மற்ற குழந்தைகளுடன் அவனை அதிகமாக பழகச் செய்யுங்கள். தனது வயதுடைய இயல்பான குழந்தைகளை கவனிக்கும்போது, மூத்த சகோதரன் அவனிடமிருந்து வேறுபட்டவன் என்பதை அவன் புரிந்துகொள்வான். அதேநேரத்தில் மூத்த சகோதரனுக்கு இளையவனது அன்பும், ஆதரவும் தேவை. அவனை இவன்தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக்கொண்டே இருங்கள். இளைய மகனுக்கு இதை குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக்கொடுக்கவில்லை என்றால், வளர்ந்ததும் அவனுக்கு இந்தப் பொறுப்பை உணர்த்துவது கடினமாகும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story