இப்படிக்கு தேவதை
வெளி உலகம் தெரியாமல் கணவரின் பாதுகாப்பில் வாழ்ந்த எனக்கு, இப்போது எதற்கெடுத்தாலும் பயம் வருகிறது. இயல்பாக இருக்க முடியவில்லை. தனியாளாக குழந்தையை எப்படி வளர்ப்பேன் என்று அஞ்சுகிறேன். இந்த நிலையை எப்படி மாற்றுவது?
1. நான் முதல் முறையாக தனியார் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்தேன். எனது அறையில் இருந்த பெண்கள் என்னுடன் வேண்டா வெறுப்பாகவே பழகி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு, அவர்களில் ஒருவரது புடவையை நான் திருடிவிட்டேன் என்று என் மீது பழி சுமத்தினர். இதனால் மனம் உடைந்த நான், என்னுடைய அம்மாவுக்கு தகவல் கொடுத்தேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து வந்தார். அந்தப் புடவையை திருடியது யார்? எதற்காக என் மீது பழி சுமத்தினார்கள்? என்ற யோசனையே என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.
இப்போது நீங்கள் உங்களை நிரபராதி என்று நிரூபிக்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. உண்மை எப்போதாவது வெளிவரும் அல்லது அனைவருக்கும் தெரிந்தே அவர்கள் உங்களை இதில் சிக்க வைத்திருக்கலாம். இதில் நீங்கள் என்ன சொன்னாலும், செய்தாலும் அவர்கள் நம்ப விரும்புவதை மட்டுமே நம்புவார்கள். எனவே இந்த சிந்தனையில் இருந்து விலகி இருங்கள்.
ஒரு சில காரணங்களால் சக விடுதி பெண்களுடன் உங்களால் இயல்பாக பழக முடியாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு முதல் முறையாக நடக்கிறதா அல்லது எப்போதுமே உங்களால் மற்றவருடன் இயல்பாக பழக முடியவில்லையா? என்று உங்களை நீங்களே பகுப்பாய்வு செய்யுங்கள். ஒருவேளை அத்தகைய இடைவெளியை நீங்கள் கண்டறிந்தால், அதை சரிசெய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் தனிப்பட்ட திறன்கள் மேம்படும். நீங்கள் மற்றவர்களுடன் சிறப்பாகப் பழக முடியும்.
2. காதல் திருமணம் செய்த எனக்கு 13 வருடங்களுக்குப் பிறகு, செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரு மகள் பிறந்தாள். இப்போது அவளுக்கு 4 வயது ஆகிறது. உடல்நலக் கோளாறால் 2 மாதங்களுக்கு முன்பு எனது கணவர் இறந்தார். தற்போது நான் பணிக்குச் சென்று பொருளாதாரத் தேவையை சமாளிக்கிறேன். வெளி உலகம் தெரியாமல் கணவரின் பாதுகாப்பில் வாழ்ந்த எனக்கு, இப்போது எதற்கெடுத்தாலும் பயம் வருகிறது. இயல்பாக இருக்க முடியவில்லை. தனியாளாக குழந்தையை எப்படி வளர்ப்பேன் என்று அஞ்சுகிறேன். இந்த நிலையை எப்படி மாற்றுவது?
காதல் கணவரை இழந்து சில மாதங்களே ஆன நிலையில், இனி வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற யதார்த்தம் உங்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும். உணர்ச்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவற்றை அடக்கி வைக்காதீர்கள். வெடித்து அழ வேண்டும் என்று தோன்றினால் அழுது விடுங்கள். நீங்கள் துக்கத்தில் இருக்கும் போது உதவியற்ற தன்மை, நம்பிக்கையின்மை, பயம், கோபம், மனச்சோர்வு போன்ற உணர்வுகள் தோன்றுவது இயல்பானது.
இத்தகைய நிலையிலும், நடைமுறை தேவைகள் காரணமாக நீங்கள் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கிவிட்டீர்கள். இதுவே உங்கள் மனவலிமைக்கு சான்று. இந்த உலகத்தில் பெண்கள் தனியாகவும் வாழ முடியும். இங்கு ஏராளமான அன்பான உள்ளங்கள் இருக்கின்றன. உங்கள் மகளுடன் நிம்மதியாக வாழ ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உங்களால் முடியும். துணிவோடு செயல்படுங்கள். உங்கள் இழப்பில் இருந்து மீண்டு வாருங்கள்.
உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், ஒரு புதிய வாழ்வுக்கான தொடக்கம் தென்பட்டால் அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். ஏனெனில் எவரும் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை-இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600-007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.