இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 1 Jan 2023 1:30 AM GMT (Updated: 1 Jan 2023 1:31 AM GMT)

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என்னைப் பற்றி யாராவது விமர்சித்தாலோ அல்லது மற்றவரிடம் பேசினாலோ மிகவும் பதற்றமாகி விடுகிறேன். அந்த நாள் முழுவதும் வேறு வேலை மீது கவனம் செல்லாமல், அந்த நிகழ்வைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சில நாட்கள் வரை, அந்த நபர்கள் என்ன பேசுகிறார்கள் என்று என்னை அறியாமல் கண்காணிக்கிறேன். இந்தப் பழக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள்.

உங்களிடம் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இங்கே விஷயம் அல்ல. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான், உங்கள் அமைதியைக் கெடுக்கிறது.

நீங்கள் உங்களை நேர்மறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது என்ன பேசுகிறார்கள் என்பது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

நீங்கள் உங்களை எதிர்மறையாக மதிப்பிட்டால், மற்றவர்கள் உங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது காயமடைவீர்கள். இதை மாற்ற முயற்சியுங்கள். உங்கள் குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எந்த நிபந்தனையும் இல்லாமல் உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதே சிறந்தது. எல்லாவிதத்திலும் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை நேர்மறையாகப் பார்க்கத் தொடங்குங்கள். உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எண்ணி பெருமை கொள்ளுங்கள். அதுவே உங்களை சிறப்படையச் செய்யும்.

2. என்னுடைய சிறு வயதிலேயே என் தந்தை என் தாயைவிட்டு பிரிந்தார். அம்மா மிகுந்த சிரமத்துக்கு இடையில் என்னை வளர்த்தார். நான் காதல் திருமணம் செய்தேன். கர்ப்பம், அம்மாவின் பக்கவாதம், மரணம், அப்பா திரும்ப வருதல், எனது இரட்டைக் குழந்தைகளை தனியாக வளர்த்தல் என அடுத்தடுத்து நிகழ்ந்ததால், என்னுடைய இயல்பு குணம் மாறி கணவருக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது. இதனால் அவருக்கும், அவரது அலுவலக தோழிக்கும் புதிய உறவு உண்டானது. கணவர் அந்தப் பெண்ணை விட்டு பிரிய மாட்டேன் என்கிறார். ஆனால், குடும்பத்துக்கு தேவையானவற்றை தவறாமல் செய்கிறார். அவரது பெற்றோர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதில் இருந்து அவரை எப்படி மீட்பது?

நீங்கள் உங்கள் கணவரையும், அந்தப் பெண்ணையும் பிரிப்பதற்கு எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்கள் உறவு பலமாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் கணவர் பொருளாதார ரீதியாக உங்களுக்கு ஆதரவளிப்பது போல் தெரிகிறது. உங்கள் குழந்தைகள் மற்றும் கணவரின் பெற்றோர் உங்களுடன் இருக்கிறார்கள். உங்களை விவாகரத்து செய்யாமல், உங்கள் கணவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது.

உங்கள் கணவரை உங்களிடம் கொண்டு வர இப்போது முயற்சிக்காமல் வாழ்க்கையைத் தொடருங்கள். அவர் உங்களிடம் திரும்பி வரும் காலம் வரும். அந்த நேரத்தில் நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம். காலத்தின் ஓட்டத்தோடு பயணம் செய் யுங்கள். எல்லாமே மாறும். பொறுமையாக இருங்கள். கடவுளின் திட்டங்களை நம்புங்கள். உங்களுக்கு அவர் சிறந்ததைச் செய்வார்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story