சர்க்கரை பொங்கலில் உள்ள சத்துக்கள்


சர்க்கரை பொங்கலில் உள்ள சத்துக்கள்
x
தினத்தந்தி 15 Oct 2023 1:30 AM GMT (Updated: 15 Oct 2023 1:30 AM GMT)

சுவையைப் போலவே சர்க்கரை பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

தென்னிந்திய பண்டிகைகளில் பிரதான உணவாக இடம் பிடிப்பது சர்க்கரை பொங்கல். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

சுவையைப் போலவே சர்க்கரை பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

குளூட்டன் இல்லாத பச்சரிசி, ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுப் பொருளாகும். இதில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், சிறு மூளையின் இயக்கத்தை தூண்டக்கூடியவை. அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். பச்சரிசியில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்கள் உள்ளன.

பாசிப்பருப்பில், புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலை குளிர்ச்சிப்படுத்தும். இதில் இருக்கும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களும் பாசிப்பருப்பில் உள்ளது. இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் வெல்லத்தில் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. அவை சருமம் உள்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டமளிக்கும். வெல்லம், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கும்.

சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ, டி, ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.

முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை. பண்டிகை தினத்தில் விரதத்தை முடித்தவர்கள் சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது அவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும்.

சர்க்கரை பொங்கலில் வாசத்திற்காக சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதனால் தான் ஒவ்வொரு விசேஷத்திலும் சர்க்கரை பொங்கல் பிரதான உணவாக இருக்கிறது. கோவில்களில் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.


Next Story