ஸ்மோக்கி மலபார் மஷ்ரூம் கறி


ஸ்மோக்கி மலபார் மஷ்ரூம் கறி
x
தினத்தந்தி 25 Jun 2023 1:30 AM GMT (Updated: 25 Jun 2023 1:30 AM GMT)

சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்மோக்கி மலபார் மஷ்ரூம் கறியின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

ஸ்மோக்கி மலபார் மஷ்ரூம் கறி

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 250 கிராம்

பச்சைப் பட்டாணி - ½ கப்

வெங்காயம் (பெரியது) - 1 (நீளவாக்கில் நறுக்கவும்)

வெங்காயம் (பெரியது) - 1 (விழுதாக அரைக்கவும்)

தக்காளி (பெரியது) - 1 (விழுதாக அரைக்கவும்)

முந்திரி - 10 (விழுதாக அரைக்கவும்)

கஸ்தூரி மேத்தி பொடி - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 2 சிட்டிகை

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

ஏலக்காய் - 1

மிளகு - 6

பிரியாணி இலை - 1

உப்பு - தேவைக்கு

சர்க்கரை - 1 சிட்டிகை

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

அடுப்பு கரித்துண்டு - 1

செய்முறை:

காளானை சுத்தம் செய்து பாதியாக வெட்டிக் கொள்ளவும். நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். காளானுடன் பொரித்த வெங்காயம், கஸ்தூரி மேத்தி பொடி, மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது (ஒரு டீஸ்பூன் அளவு), தயிர், பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய், ½ டீஸ்பூன் நெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் அதில் ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்பு அதில் வெங்காய விழுதைப் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு மீதமிருக்கும் இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை நன்றாக வதக்கவும்.

பின்பு அதில் சீரகத்தூள், தனியாத்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து கலக்கவும் (இப்போது தேவைப்பட்டால் இந்தக் கலவையில் சிறிது சூடான தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்).

பின்னர் அதில் தயாரித்து வைத்திருக்கும் காளான் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அதில் பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கிளறவும். பிறகு முந்திரி விழுதை சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். (காளானில் இருந்து தண்ணீர் வெளியேறும் என்பதால் உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும்)

பின்னர் அந்தக் கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையை சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழையைத் தூவி, ஒரு நிமிடம் மூடி வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஸ்மோக்கி வாசனை ஏற்படுத்த:

ஒரு துண்டு கரியை அடுப்பு அனலில் காட்டி, அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அப்படியே காளான் கறியில் வைத்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பிறகு அதில் சிறிது கரம் மசாலா தூளை சேர்த்தால் சுவையான 'ஸ்மோக்கி மலபார் மஷ்ரூம் கறி' தயார்.


Next Story