எடைக் குறைப்புக்கு அவசியமான நீர்ச்சத்து


எடைக் குறைப்புக்கு அவசியமான நீர்ச்சத்து
x
தினத்தந்தி 21 Aug 2022 1:30 AM GMT (Updated: 21 Aug 2022 1:31 AM GMT)

தனியாகத் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமானத்தை ஊக்குவிக்கும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து சி மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்குவதுடன், தேவையற்ற கொழுப்பு கரையும்.

ரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதற்கு, உடல் எடையை சரியாக பராமரிப்பது முக்கியம். எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் பலர், சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது என்று உணவு முறையை மாற்றி அமைத்து பின்பற்றுவார்கள்.

இவற்றுடன் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் உடல் எடைக் குறைப்பில் அவசியமானது. இதைத் தவிர்க்கும்போது எடையைக் குறைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்காது.

நம் உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலில் தண்ணீர் அளவு குறைந்தால் தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்னும்,

சாப்பிட்டு 30 நிமிடம் கழித்தும் தண்ணீர் குடிப்பது, செரிமானம் சீராக நடைபெறுவதற்கு உதவும்.

உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை எரிக்கவும், சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை உடல் சரியான முறையில் உறிஞ்சவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடையும் சீராகக் குறையும்.

தனியாகத் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமானத்தை ஊக்குவிக்கும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து சி மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்குவதுடன், தேவையற்ற கொழுப்பு கரையும்.

சர்க்கரை சேர்த்த பானங்கள் அதிக கலோரிகளைக் கொண்டிருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். பழச்சாறு, தேநீர், பச்சைத் தேயிலை தேநீர் போன்றவற்றை சர்க்கரை சேர்க்காமல் பருகலாம்.

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது உடல் எடை குறைப்பதற்கு உதவுவதோடு, கெட்டக் கொழுப்பு அதிகரிக்கும் அபாயத்தையும் குறைக்கும்.

எடையைக் குறைக்க உதவும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்:

குறைந்த கலோரிகளைக் கொண்ட மாதுளம்பழச் சாற்றை தினமும் குடிப்பது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

தர்பூசணி பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், அவ்வப்போது சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். தினமும் இரண்டு கப் தர்பூசணி சாப்பிடுவது மன நிறைவை அதிகரிக்கச் செய்யும். இது உடல் எடை, பி.எம்.ஐ மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளதால், அதை சாலட் அல்லது சாறாகப் பருகுவதால் உடல் எடை எளிதாகக் குறையும்.

ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, கிவி போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஆரோக்கியமாக எடையைக் குறைக்கலாம்.


Next Story