மருத்துவ குணங்கள் நிறைந்த ஜாதிக்காய் ஊறுகாய்


மருத்துவ குணங்கள் நிறைந்த ஜாதிக்காய் ஊறுகாய்
x
தினத்தந்தி 23 July 2023 1:30 AM GMT (Updated: 23 July 2023 1:31 AM GMT)

ஜாதிக்காய் ஊறுகாயை தினமும் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற பிரச்சினைகள் குணமாகும். ஜாதிக்காயில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களால் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்க உதவும். உடலின் உள் உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

இந்தியாவின் பாரம்பரிய உணவுமுறையில் ஊறுகாய்க்கு முக்கிய இடம் உண்டு. பழமை மாறாமல், நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய முறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய்களை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இதில் உள்ள புரோபயாட்டிக்குகள், குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகரிக்கச் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஜாதிக்காய் ஊறுகாயைப் பற்றிய தகவல்கள் இதோ…

தமிழ்நாட்டில் குற்றாலம், கொல்லிமலை, ஏற்காடு ஆகிய பகுதிகளில் ஜாதிக்காய் அதிக அளவில் விளைகிறது. மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட மூன்று தினங்களுக்குள் ஜாதிக்காயின் சதைப்பற்றான தோல் பகுதியை சிறிது சிறிதாக வெட்டி ஊறுகாய் போடுவார்கள். இந்த ஊறுகாயை தினமும் குறைந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. 'இயற்கை வயாகரா' என்று அழைக்கப்படும் ஜாதிக்காய், பால் உணர்வை தூண்டக்கூடியது. தாம்பத்தியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் ஜாதிக்காய் ஊறுகாயை தினமும் சாப்பிட்டு வரலாம். மன அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதிக்காய் சிறந்த தீர்வாகும்.

ஜாதிக்காயில் இருக்கும் 'மைரிஸ்டிசின்' என்ற சத்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமையான தோற்றம் அளிக்கும்.

ஜாதிக்காய் ஊறுகாயை தினமும் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற பிரச்சினைகள் குணமாகும். ஜாதிக்காயில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களால் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்க உதவும். உடலின் உள் உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை வாந்தியை கட்டுப்படுத்த, கர்ப்பிணிகள் தினமும் ஜாதிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிளகு

தினமும் சமையலில் பயன்படுத்தப் படும் மசாலாப் பொருட்களில் ஒன்றான மிளகு, ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிகள் தினமும் குறைந்த அளவு மிளகை உணவில் சேர்த்து வருவதன் மூலம் பல நன்மைகளைப் பெற முடியும்.

கர்ப்ப காலத்தில் பலரும் செரிமான பிரச்சினைகளால் சிரமப்படுவார்கள். மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை சீராக்கும். வயிறு உப்புதல், வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை தடுக்கும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற சேதங்களால் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. மிளகில் இருக்கும் 'கரோட்டினாய்டு' எனும் ஆக்சிஜனேற்றி, டி.என்.ஏ-வில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பேதாடு புற்றுநோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது.


Next Story