சீரான மாதவிடாய் சுழற்சி


சீரான மாதவிடாய் சுழற்சி
x
தினத்தந்தி 9 Oct 2022 1:30 AM GMT (Updated: 9 Oct 2022 1:30 AM GMT)

பெண் பருவமடைந்த முதல் இரண்டு வருடங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் அதே நாளில் மாதவிடாய் வெளியேறாது. அதேபோல மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கிய பெண்களுக்கும், மாதவிடாய் வரும் நாட்களில் வேறுபாடு இருக்கும்.

ருவமடைந்த பிறகு, ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா அல்லது ஒழுங்கற்று இருக்கிறதா என்பதை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதனால் கருப்பை மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதாக குணப்படுத்த முடியும்.

சீரான மாதவிடாய் சுழற்சியின் அறிகுறிகள் பற்றி இங்கே பார்ப்போம்.

சினைப்பையில் இருந்து வெளியேற்றப்படும் கருமுட்டை கருவுற்றால் குழந்தையாக வளர ஆரம்பிக்கும். அவ்வாறு நடைபெறாவிட்டால் அதற்காக உருவான சவ்வுகளும், சேமிக்கப்பட்ட ரத்தமும் கழிவாக பெண்ணுறுப்பின் வழியே வெளியேறும். இதுவே மாதவிடாய் எனப்படுகிறது. இவ்வாறு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளியேறுவது முதல் மாதவிடாய் ரத்தப்போக்கு வெளியேறுவது வரையிலான செயல்பாடே 'மாதவிடாய் சுழற்சி' என்று அழைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் ஆகும். 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி உண்டாவதும் சாதாரணமாகவே கருதப்படுகிறது. இடைப்பட்ட இந்தக் காலநிலை ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறலாம்.

மாதவிடாய் கட்டம்

பெண் பருவமடைந்த முதல் இரண்டு வருடங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் அதே நாளில் மாதவிடாய் வெளியேறாது. அதேபோல மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கிய பெண்களுக்கும், மாதவிடாய் வரும் நாட்களில் வேறுபாடு இருக்கும்.

வழக்கமாக மாதவிடாய் காலத்தில் 3 முதல் 5 நாட்கள் வரை ரத்தப்போக்கு இருக்கும். பருவம் அடைந்த ஆரம்பகாலங்களில் சிலருக்கு முதல் மற்றும் இரண்டாம் நாளில் மட்டுமே ரத்தப்போக்கு ஏற்படலாம். ஒரு சிலருக்கு முதல் நாள் சிறிதளவு மட்டுமே இருக்கும். இரண்டாம் நாளில் ரத்தப்போக்கு இல்லாமல் மூன்றாம் நாளில் தொடங்கும். இது எட்டு நாட்கள் வரை நீடிக்கும். இவை அடுத்தடுத்த சுழற்சியில் சீராகக்கூடும்.

அறிகுறிகள்:

மாதவிடாய் காலத்தில் முகப்பரு, வயிற்றில் தசைப்பிடிப்பு, அதிக பசி, தூங்குவதில் சிரமம், மனக்குழப்பம், மார்பகங்கள் கனத்தல் மற்றும் மென்மை அடைதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவை ஒவ்வொரு பெண்ணுக்கும் ேவறுபடும். சிலருக்கு முதுகு மற்றும் மேல் தொடைகளில் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, எரிச்சல் உணர்வு, தலைவலி மற்றும் சோர்வு போன்றவையும் உண்டாகலாம்.

மருத்துவரை அணுகுதல்:

உங்கள் மாதவிடாய் எப்போது தொடங்குகிறது மற்றும் முடிகிறது, உதிரப்போக்கு எப்படி உள்ளது, நாப்கினை எப்போது மாற்றுகிறீர்கள், நாள் ஒன்றுக்கு எத்தனை நாப்கின்களை மாற்றுகிறீர்கள், ரத்தம் கட்டிகளாக வெளியேறுகிறதா, வயிற்றுப் பிடிப்புகள் கடுமையாக உள்ளதா, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு உள்ளன? இதுபோன்ற அறிகுறிகள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து 3 மாதங்கள் கண்காணித்து குறித்து வையுங்கள்.

இவற்றில் ஏதேனும் இயல்புக்கு மீறிய மாற்றங்கள் தெரிந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.


Next Story