பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்


பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்
x
தினத்தந்தி 19 Jun 2022 1:30 AM GMT (Updated: 19 Jun 2022 1:31 AM GMT)

வெயிலில் சென்று வந்த பிறகு சருமத்தில் எரிச்சல் இருக்கும். அதைப் போக்க சந்தனம் சிறந்த தீர்வாகும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, சந்தனத்தைத் தடவினால் எரிச்சல் உடனே நீங்கும்.

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன எண்ணெய், சந்தன வாசனைத் திரவியங்கள் என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் சருமம், வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம், உணர்திறன் சருமம் என எந்தவகை சருமத்திற்கும் ஏற்ற வகையில், சந்தனம் சிறந்த பராமரிப்புப் பொருளாக விளங்குகிறது.

ஒவ்வொரு சருமத்துக்கும் ஏற்றாற்போல, சந்தனத்துடன் மற்ற பொருட்களைக் கலந்து பயன்படுத்தலாம். கடைகளில் வாங்கும்போது, சந்தனத்தின் தரத்தை கவனித்து வாங்க வேண்டும்.

சந்தனக் கட்டைகளை வாங்கி அரைத்து அதனுடன் ரோஜா பன்னீர் ஊற்றி குழைத்து, பயன்படுத்துவது பாதுகாப்பானது. எல்லா விதமான சருமத்தினரும் இந்த முறையை பின்பற்றலாம். இது சருமத்திற்கு குளிர்ச்சியைத் தரும்.

சருமத்தில் சுருக்கங்கள் இருந்தால், சந்தனத்துடன் தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், சந்தனத்துடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி, இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள் நீங்கும்.

வெயிலில் சென்று வந்த பிறகு சருமத்தில் எரிச்சல் இருக்கும். அதைப் போக்க சந்தனம் சிறந்த தீர்வாகும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, சந்தனத்தைத் தடவினால் எரிச்சல் உடனே நீங்கும்.

முகம் பளபளப்பாக இருப்பதற்கான ஆலோசனைகள்:

வறண்ட சருமம் கொண்டவர்கள் சந்தனத்துடன் பால் கலந்து பயன்படுத்தலாம். பாலுக்கு பதிலாக பாதாம் எண்ணெய் கலந்தும் முகத்திற்கு 'பேஸ் பேக்' போடலாம். உங்கள் சருமம் எண்ணெய்ப் பசை கொண்டதாக இருந்தால், சந்தனத்துடன் தக்காளிச் சாறு மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசலாம். சந்தனத்துடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து 'பேஸ் பேக்' போடலாம்.

சருமத்தில் சுருக்கம் அதிகமாக இருந்தால் சந்தனத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மெட்டி கலந்து பூசலாம்.

முகப்பரு வடுக்கள் நீங்குவதற்கு சந்தனத்துடன் தேன் கலந்து 'பேஸ் பேக்' போடலாம்.

சருமம் பொலிவற்று இருந்தால் சந்தனத்துடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் கலந்து 'பேஸ் பேக்' போடலாம். சந்தனத்துடன் தயிர் மற்றும் தேன் கலந்தும் பயன்படுத்தலாம்.


Next Story