ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் காமாட்சி


ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் காமாட்சி
x
தினத்தந்தி 19 Jun 2022 1:30 AM GMT (Updated: 19 Jun 2022 1:31 AM GMT)

2010-ம் ஆண்டில் ஆட்டிசம் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற மல்லிகா கணபதியை சென்னையில் சந்தித்தேன். அவரது வழிகாட்டுதலுடன் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் அமைப்பில் சேர்ந்தேன். அந்தக் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பதற்கான படிப்பு மற்றும் பயிற்சிகளை 2011-ம் ஆண்டில் முடித்தேன்.

ஆட்டிசம் என்பது நோயல்ல. மூளையின் செயல்பாடுகள் குறைந்து தகவல் பரிமாற்றம் தடைபடுவதையே ஆட்டிசம் என்கிறோம். இது புரிந்து கொள்ளும் திறனை குறைப்பதோடு, இயல்பான குழந்தைகளிடம் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் அனைவருக்கும் பயிற்சி தருபவராக, தன்னார்வ சேவகியாக செயல்பட்டு வருகிறார் மதுரையில் வசிக்கும் காமாட்சி. அவரது அனுபவங்கள் இங்கே…

"1999-ம் ஆண்டில் எங்களுக்கு மூத்த குழந்தையாக சந்திரசேகர் பிறந்தான். அவனுக்கு 2002-ம் ஆண்டில் 'ஆட்டிசம்' பாதிப்பு இருந்ததைக் கண்டறிந்தோம். நானும், என் கணவரும் மனதளவில் துயரப்பட்டாலும், எங்களைத் தேற்றிக் கொண்டு அவனுக்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தோம்.

அந்த சமயத்தில் ஜெயந்தி, சாரதா என்ற இரு பெண்கள் 'ஸ்பெஷல் சைல்டு' எனப்படும் சிறப்புக் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய, சிறப்புக் கல்வி படித்துவிட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளியை மதுரையில் நடத்தி வந்தார்கள். அதில் எங்கள் மகன் சந்திரசேகரைச் சேர்த்தோம்.

2010-ம் ஆண்டில் ஆட்டிசம் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற மல்லிகா கணபதியை சென்னையில் சந்தித்தேன். அவரது வழிகாட்டுதலுடன் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் அமைப்பில் சேர்ந்தேன். அந்தக் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பதற்கான படிப்பு மற்றும் பயிற்சிகளை 2011-ம் ஆண்டில் முடித்தேன்.

அன்று முதல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளிகளுக்குச் சென்று பயிற்சி தரத் தொடங்கினேன். சென்னையில் ஆட்டிசம் கல்வியை முழுவதுமாகப் படித்து முடித்து மதுரை திரும்பியபோது 'ஒரு ஆட்டிசம் பாதித்த குழந்தை முன்பு நீ உட்காரும்போது, அந்தக் குழந்தையிடம் உன்னோட பணி செய்ய வந்திருக்கேன். என்னை ஏற்றுக்கொள். நான் உன்னை புரிந்துகொள்வதற்காக, உன்னை எனக்கு தெரியப்படுத்து என்று உள்மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் ஆழ்மனதுடன் பேச வேண்டும்' என்று மல்லிகா கணபதி என்னிடம் கூறிய வார்த்தையைத் தாரக மந்திரமாக ஏற்று, செயல்பட்டு வருகிறேன்.

நான் செயல்பட்டு வரும் அமைப்பு சிறப்பு ஆட்டிசம் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துக்காக தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள தன்னார்வலர்கள் ஆட்டிசம் சிறுவர்களுக்கு, பல் துலக்குவது முதல் குளிப்பது வரை மற்றவர்கள் போல் அவர்கள் வேலைகளை தானாகச் செய்யச் சொல்லிக் கொடுக்கிறோம். விவசாய வேலைகள் கற்றுத் தருகிறோம். தியானம், யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித்தருகிறோம்.

சிறப்பு பயிற்சிகள் கொடுத்து ஆட்டிசம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாரா ஒலிம்பிக், ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறச் செய்யும் நோக்கத்துடன் செயலாற்றுகிறோம். ஆட்டிசம் பாதித்த சிறுவர்

களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கிறோம்.

ஆட்டிசம் பாதித்த அனைத்து குழந்தைகளையும், என் மகன் சந்திரசேகர் போல் நினைத்து பாசத்துடன் அரவணைத்துப் பயிற்சி அளித்து வருகிறேன். எங்கள் அமைப்பு மூலம் 'உலக யோகாசன தினம்' அன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றுபட்டு, யோகா பயிற்சி செய்து 'உலக சாதனை' நிகழ்த்திக் காட்டினர். இது எளிதான விஷயம் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை அறிந்தால், மனம் தளராமல் அதற்கான சிறப்பு பயிற்சிகளையும், சிகிச்சைகளையும் அளிக்க வேண்டும்" என்றார் காமாட்சி.


Next Story