கதைகள் சொல்லி கற்பனையை வளர்க்கும் சரிதா


தினத்தந்தி 26 Jun 2022 1:30 AM GMT (Updated: 26 Jun 2022 1:31 AM GMT)

மூத்த மகனுக்கு தினமும் கதைகள் சொல்லுவேன். இளைய மகன் பிறந்த பிறகு அவனுக்கும் கதைகள் சொல்லத் தொடங்கினேன். நான் சொல்லும் கதைகளை ரசித்து ஆர்வத்தோடு கேட்ட அவன், அந்தக் கதைகளைத் திரும்பச் சொல்லத் தொடங்கினான். அதைப் பார்த்துதான் ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெறும் சிறுவர் வாசகர் வட்டத்தில் கதை சொல்ல, நூலகர் ஷீலாவிடம் வாய்ப்பு பெற்றேன். என்னுடைய கதைசொல்லும் பயணம் அங்குதான் தொடங்கியது.

"கதைகள் கேட்பதால் குழந்தைகளின் கற்பனைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர்களின் படைப்பாற்றலும், சிந்திக்கும் திறனும் மேம்படுகிறது. கதைகள் கேட்டு வளரும் குழந்தைகளால், எதையும் புதிய கோணத்தில் சிந்தித்து வெற்றி பெற முடியும்" என்கிறார் சரிதா ஜோ.

ஈரோட்டைச் சேர்ந்த இவர், குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அதை மீண்டும் அவர்களையே கூறச் செய்கிறார். இதன்மூலம் குழந்தைகளின் தயக்கத்தை உடைத்து தன்னம்பிக்கையோடு பேசு

வதற்கும் அவர்களைத் தயார்படுத்துகிறார். கதைசொல்லியாக கவனம் ஏற்பதோடு மட்டுமில்லாமல், பட்டிமன்ற பேச்சாளராகவும், சிறார் இலக்கியவாதியாகவும் முத்திரை பதித்துள்ளார். அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து…

உங்களைப் பற்றிய அறிமுகம்?

பெற்றோர் சின்னசாமி-கண்ணம்மாள். நான் தமிழ், கல்வியியல், உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களையும், தற்காப்புக் கலையான குங்பூவில் கறுப்புப் பட்டையும் பெற்றிருக்கிறேன். தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி இருக்கிறேன். உலகின் 57 நாடுகளில் ஒலிபரப்பான சேரிட்டி பண்பலை வானொலியில் தொகுப்பாளராகவும், கிரியேட்டிவ் டைரக்டராகவும் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினேன்.

தற்போது கதைசொல்லியாகவும், சிறார் இலக்கியவாதியாகவும், மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் இருக்கிறேன். விலங்குகள் நல அமைப்பு ஒன்றின் தூதுவராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனது கணவர் ஜோதிலிங்கம் சொந்தத் தொழில் செய்கிறார். எங்களுக்கு சஞ்சய், சச்சின் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் எண்ணம் எப்படி வந்தது?

மூத்த மகனுக்கு தினமும் கதைகள் சொல்லுவேன். இளைய மகன் பிறந்த பிறகு அவனுக்கும் கதைகள் சொல்லத் தொடங்கினேன். நான் சொல்லும் கதைகளை ரசித்து ஆர்வத்தோடு கேட்ட அவன், அந்தக் கதை

களைத் திரும்பச் சொல்லத் தொடங்கினான். அதைப் பார்த்துதான் ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெறும் சிறுவர் வாசகர் வட்டத்தில் கதை சொல்ல, நூலகர் ஷீலாவிடம் வாய்ப்பு பெற்றேன். என்னுடைய கதைசொல்லும் பயணம் அங்குதான் தொடங்கியது.

இந்தத் தொடர் பயணத்தில், குழந்தைகளிடம் இருந்து ஏராளமானவற்றை இன்றுவரை கற்று வருகிறேன். பல குடும்பங்களில் குழந்தைகள் பேசுவதை பெரியவர்கள் கேட்பது இல்லை. ஆனால், என்னுடைய கதை சொல்லல் நிகழ்வில் குழந்தைகள் பேசுவதைக் காதுகொடுத்து கேட்கிறேன். இதைக் 'கதையாடல்' என்று சொல்லலாம்.

கதை சொல்லும் போது நடக்கும் நெகிழ்வான சம்பவங்களும், கதை சொல்லி முடித்தபின்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பெறும் பின்னூட்டங்களும், நான் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்பதை உணர்த்துகிறது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்றாற்போல் கதைகளைத் தேர்வு செய்து கூறி வருகிறேன்.

மேலும் ஆசிரியர்களுக்கும், கதை சொல்லியாக விரும்புபவர்களுக்கும் கதை சொல்லும் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன். தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், தன்னம்பிக்கைப் பேச்சாளராக ஊக்கம் வழங்கி வருகிறேன்.

இதுவரை எத்தனை குழந்தைகளுக்கு கதை சொல்லி இருக்கிறீர்கள்?

500-க்கும் மேற்பட்ட கதை சொல்லும் நிகழ்வுகள் மூலமாக, பத்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி இருக்கிறேன். இதுவரை சிறுவர்களுக்கான இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள் என மொத்தம் ஐந்து புத்தகங்களை எழுதியிருக்கிறேன்.

பட்டிமன்ற பேச்சாளராக உங்களின் அனுபவங்கள் எப்படி?

பட்டிமன்றங்களில் பேச்சாளராக பங்குபெறும்போது குழுவாகச் செயல்படுதல், நடுவராக இருக்கும்போது குழுவை வழி நடத்திச் செல்லும் தலைமைப் பண்பு, பட்டிமன்றத்தில் பேசும் கருத்துக்களை சுய பரி

சோதனைக்கு உட்படுத்திப் பார்த்தல், பட்டிமன்றத்தில் பேசத் தயாராகும் தேடலின் வழியாக ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ளுதல் போன்றவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக உங்களின் பங்களிப்பை சொல்லுங்கள்?

விலங்குகளின் நலன் மற்றும் உரிமை தொடர்பாக கதைகளை உருவாக்கி, செல்லும் இடங்களில் எல்லாம், விலங்குகள் மீதான பார்வையை மாற்றும் படி மாணவர்களிடம் கூறி வருகிறேன்.

ஒருமுறை, தெருவில் வசிக்கும் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்க வேண்டும் என்று கதைகளின் வழியே கூறினேன். அதைக் கேட்ட ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் சென்று கூறி, அவர்கள் இன்றுவரை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தண்ணீரும், உணவும் வைத்து வருகிறார்கள். இதை அந்தக் குழந்தையின் அம்மா மூலம் அறிந்தது நெகிழ்வான தருணம்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்?

எனது முதல் நாவலான 'மந்திரக் கிலுகிலுப்பை', உலகளாவிய நிலையில் சிறந்த சிறார் நூல்களுக்கான மூன்றாம் பரிசு பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய 'அசோகமித்திரன் படைப்புகள் விருது-2020', திருப்பூர் கனவு அமைப்பு வழங்கிய 'சக்தி விருது-2021', தமிழால் இணைவோம் உலகத்தமிழ் பேரியக்கம் வழங்கிய 'தங்க மங்கை விருது-2022' ஆகியவற்றைப் பெற்றிருக்கிறேன்.

எழுத்தாளர்கள் உதயசங்கர், நாறும்பூநாதன், தமிழ்ச்செல்வன், பேராசிரியர் மாடசாமி இவர்களிடமிருந்து கிடைத்த பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறேன்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா-வின் முன்பு ஒரு நிகழ்வில் அவரின் இரண்டு கதைகளைக் கூறியபோது, நான் சிறப்பாகக் கதை சொன்னதாக அவர் பாராட்டியதைக் கவுரவமாகக் கருதுகிறேன்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

நவீன கால குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி ஏராளமான கதைகளை எழுத வேண்டும். புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி, கதை சொல்ல வேண்டும். அதன் வழியாக வாசிப்பை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக அரசுப் பள்ளிக் குழந்தைகளை, கதைகள் வழியே தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கதைசொல்லல், எழுதுதல் மட்டுமில்லாமல், தற்காப்புக்கலை உளவியல் பற்றியும், அதன் அவசியம் பற்றியும் ஒவ்வொரு குழந்தைக்கும் விளக்கி, செல்லும் இடங்களில் எல்லாம் குழந்தைகள் ஏதோ ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள உந்துதலை ஏற்படுத்த வேண்டும். வாழ்வின் எல்லை வரை கதைகளோடும், குழந்தைகளோடும் பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.


Next Story