கல்வியும், நாடகமும் தேடித் தந்த வெற்றி


கல்வியும், நாடகமும் தேடித் தந்த வெற்றி
x
தினத்தந்தி 4 Sep 2022 1:30 AM GMT (Updated: 4 Sep 2022 1:30 AM GMT)

குழந்தைகள் புதியவற்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டேன். மலேசிய நாட்டு மழலைகளுக்கு, எவ்வாறு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பது என்பதில் நானும், நண்பர்கள் முத்து, நெடுமாறன் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த முயற்சிதான், 30 நாளில் சுலபமான முறையில் எல்லோருக்கும் தமிழ் கற்பிப்பது.

'பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கதை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்த்து அறிவை விசாலமாக்கும்' என்கிறார் கஸ்தூரி ராமலிங்கம்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மலேசியாவின் 'மாசாய் தமிழ் பள்ளி'யில் பணியாற்றி வருகிறார். நாடகத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பள்ளிக் குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சிகளை வழங்கி மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அரங்குகளில் பல்வேறு சிறப்பான படைப்புகளை கொடுத்தவர்.

பள்ளிக் குழந்தைகள் தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளை எளிதாக கற்பதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களையும், செயலிகளையும் உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இவரிடம் பேசியதிலிருந்து:

குழந்தைகள் விளையாட்டோடு, கல்வி கற்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் குறித்து?

குழந்தைகள்தான் என்னுடைய வாழ்க்கை. அவர் களோடு இருப்பதை எப்போதும் விரும்புவேன். குழந்தைகள் புதியவற்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டேன். மலேசிய நாட்டு மழலைகளுக்கு, எவ்வாறு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பது என்பதில் நானும், நண்பர்கள் முத்து, நெடுமாறன் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த முயற்சிதான், 30 நாளில் சுலபமான முறையில் எல்லோருக்கும் தமிழ் கற்பிப்பது.

இதில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் புதுப்புது பயிற்சிகள், எழுத்துகள், சொற்றொடர்கள் ஆகியவற்றை விளையாட்டின் மூலமாக கற்றுக் கொண்டனர். மன மகிழ்ச்சி கொடுத்த இந்த முயற்சியை, உலகமெங்கும் விரிவடைய செய்ய வேண்டும் என பலர் கேட்டுக்கொண்டனர்.

இதைச் செய்வதில் பல சவால்கள் இருந்தன. அதற்கான செயலிகளில் வித்தியாசமான விளையாட்டுகள் இருக்க வேண்டும். அதற்கு பொருட்செலவு அதிகமாகும். சிரமங்கள் அதிகரிக்கும். இருந்தாலும் இதை நிச்சயமாக செய்தே ஆகவேண்டும் என்று 2017-ம் ஆண்டு புதிய திட்டத்தை உருவாக்கினோம்.

அது தான் 'கணியும்-மணியும்' (கணிதம்-காலம்) எனும் வரிசையில் புதிய செயலிகளை உருவாக்குதல். இது பெரிய தொடர் திட்டம் என்று கூட சொல்லலாம்.

கணியும்-மணியும் என்ற செயலியில் முதலில் ஆறு கதைகள் இருக்கும். அதில் ஒவ்வொரு கதையை வாசித்த பிறகு அல்லது கேட்ட பிறகு, குழந்தைகள் அதைப் பற்றிய பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அந்த செயலியில் நகரும் படங்கள், இசை போன்றவை இடம் பெற்றிருக்கும். இதனால் மாணவர்களின் படைப்பாக்கத் திறன் கூடும். மொழிவளம் அதிகரிக்கும். இவ்வாறு பல வகையான நுணுக்கங்களை கொண்டு செயலியை உரு வாக்கினோம்.

இது உலக அளவில் பெரிய வரவேற்பை உண்டாக்கியது. கலிபோர்னியாவில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டில் இதைப்பற்றி ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பித்திருக்கிறேன். எனது கணவரும், குடும்பத்தினரும் எனது பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.


நாடகத்துறை வெற்றிப் பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லும் அனுபவம் பற்றி?

தொடக்கத்தில் கோலாலம்பூர், கேமரன்மலை, பகாங் ஆகிய இடங்களுக்கு மாணவர்களை போட்டிக்காக அழைத்துச் சென்றிருக்கிறோம். மலாய் நாடகப் போட்டியில் 2012, 2014, 2015-ம் ஆண்டுகளில் முதலிடத்தைப் பெற்றோம். 2018-ம் ஆண்டில் முதன் முதலாக ஹாங்காங் நாட்டிற்கு 12 மாணவர்களை அழைத்துச் சென்றேன். அங்கே ராமாயண நாடகத்தை ஆங்கில மொழியில் படைத்தனர். அதற்காக இரண்டு விருதுகள் கிடைத்தது. 2019-ம் ஆண்டில் சிங்கப்பூர் நாட்டில் மூன்று நாடகத்தை ஒரே நேரத்தில் படைத்தோம். அதில் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.

மாணவர்கள் நாடகத்தில் உள்ள கதை மாந்தர்கள், சுற்றுப்புறங்கள், கதையின் கரு ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது அவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் பண்புள்ளவர்களாக உருவெடுக்கின்றனர். புதுமையாக சிந்திக்க முற்படுகிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கின் காரணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது தடைப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெற்றோர்களின் பங்களிப்பு அளப்பரியது. நாடகப் பயிற்சியின் போது, இலவச உணவை வழங்குவார்கள். அது மட்டுமின்றி, நாடக ஆடைகளை தேர்ந்தெடுக்கவும், ஆபரணங்களைச் செய்யவும், முக ஒப்பனை, மேடை அலங்காரம், நாடகப் பொருட்கள் செய்யவும் உறுதுணையாக இருக்கின்றனர்.

கல்வியைத் தாண்டி குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரைகள்?

கடந்த 48 வருடங்களுக்கு முன்பாக தமிழில் நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதப்பட்டன. பல பருவ இதழ்களும் சிறுவர் - சிறுமியருக்காக வெளியிடப்பட்டன. இன்று பிரபலமாக இருக்கும் ஹாரிபாட்டர் போன்ற கதைகள் எல்லாம், அன்றே குழந்தைகளுக்கான புத்தகத்தில் வெளிவந்துள்ளன. சிறுவருக்கான படக்கதைப் புத்தகங்கள் மாத இதழ்களாக வெளியாகின. வாண்டு மாமாவின் கதைகளும், கட்டுரைகளும் அன்றைய சிறுவர்களுக்கு விருந்தளித்தன. ஆனால், இன்றைய கணினி யுகத்தால் எல்லோருக்கும் கதைப் புத்தகங்கள் மறந்து போய்விட்டது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கணினியில் இது போன்ற கதைப் புத்தகங்களைத் தேடிப் பார்த்து படிக்கச் சொல்ல வேண்டும்.


Next Story