ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் மாலை... இது நாமக்கல் அனுமன் ஜெயந்தி விழா ஸ்பெஷல்


ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் மாலை... இது நாமக்கல் அனுமன் ஜெயந்தி விழா ஸ்பெஷல்
x
தினத்தந்தி 17 Dec 2025 5:40 PM IST (Updated: 17 Dec 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வடைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

நாமக்கல்

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் உருவானது. நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஆஞ்சநேயர்.

இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் அனுமன் ஜெயந்தி விழா (ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா) விமரிசையாக கொண்டாடப்படும். 1 லட்சத்து 8 வடைகளால் ஆன பிரமாண்ட மாலை தயாரிக்கப்பட்டு, அதை சுவாமிக்கு அணிவித்து அழகுபார்ப்பது இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஆகும்.

அவ்வகையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் (19-12-2025) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன. இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வடைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

வடைகள் தயாரிப்பதற்காக 2500 கிலோ உளுத்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 82 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படும். பொருட்களை சுத்தம் செய்து மாவு அரைத்து வடை தயாரிக்கப்படுகிறது. இரவு பகலாக நடைபெற்று வரும் இப்பணிகள் முடிந்ததும், 1 லட்சத்து 8 வடைகளும் கயிற்றில் மாலைகளாக கோர்க்கப்பட்டு பின்னர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு அதிகாலை 5 மணியளவில் 1 லட்சத்து 8 வடை மாலைகளை அணிவித்து அலங்காரம் செய்யப்படும். வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சி அளிக்க உள்ளார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.

இந்த சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்த்தூள், 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும். அன்றைய தினம் காலை முதல் இரவு வரை பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story