சபரிமலை தரிசன முன்பதிவு தொடங்கியது.. மண்டல பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

நடப்பு சீசன் மண்டல பூஜை இம்மாதம் 27-ம் தேதியும, மகர விளக்கு பூஜை 2026 ஜனவரி 14-ம் தேதியும் நடக்கிறது.
சபரிமலையில், மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி, கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் (கார்த்திகை - 1 ) வழக்கமான பூஜை வழிபாடு நடந்து வருகிறது. சீசனையொட்டி, 2026 ஜனவரி 10-ம் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி, மண்டல பூஜை இம்மாதம் 27-ம் தேதியும, மகர விளக்கு பூஜை 2026 ஜனவரி 14-ம் தேதியும் நடக்கிறது.
இந்த நிலையில், மண்டல பூஜையையொட்டி, டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை தொடங்கியது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்படும் டிசம்பர் 26-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 30 ஆயிரம் பக்தர்களும், மண்டல பூஜை தினத்தில் (27-ம் தேதி) 35 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள். மேலும் இவ்விரு நாட்களும், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






