திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து - பக்தர்கள் ஏமாற்றம்


திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து - பக்தர்கள் ஏமாற்றம்
x

நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி,

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருத்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் இந்த கோவிலில் தற்போது தங்கத்தேர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதே சமயம், கோவிலில் இருந்த வெள்ளித்தேர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக முழுவதும் எரிந்து போனது.

தொடர்ந்து பக்தர்கள் வெள்ளித்தேரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளித்தேரை தயார் செய்வதற்கான உத்தரவு தமிழக சட்டமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளித்தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டது. 16 அடி உயரத்தில், 450 கிலோ எடையில் வெள்ளித்தேர் உருவாக்கப்பட்டது.

தேரை தயார் செய்யும் பணி 2 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தேரை வெள்ளோட்டம் விடுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக வெள்ளோட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நவம்பர் 3-ந்தேதி(நாளை) வெள்ளித்தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், வெள்ளித்தேரில் சுவாமி, அம்பாள் வலம் வருவதைக் காண ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த சூழலில், இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் 16-ந்தேதிக்குள் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் நடைபெறாவிட்டால், மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story