திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் 5-வது நாளான நேற்று முன்தினம் இரவில் பஞ்சமூர்த்திகளான வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகரும், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி ரிஷப வாகனங்களில் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்பத்தில் எழுந்தருளினர்.

பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சாமி வீதிஉலா தொடங்கியது. பின்னர் பஞ்சமூர்த்திகள் மாட வீதிகளில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் இரவில் சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் விழாவான நேற்று காலை 11.30 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடைபெற்றது. நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். மாணவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதிகளில் செல்ல, அவர்களை தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்தனர். பின்னர் விநாயகரும், சந்திரசேகரரும் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாடவீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளி தேரையொட்டி திருவண்ணாமலை நகரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேரோட்டம்

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலையில் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா சென்றது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேரான அருணாசலேஸ்வரரின் மகா ரதம் இழுக்கப்பட்டது. இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

தேரோட்டத்தையொட்டி இன்று திருவண்ணாமலையில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான 3-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com