இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
Live Updates
- 15 Aug 2025 12:56 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
- 15 Aug 2025 12:54 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்..? - கைதான நடிகையிடம் 2-ம் நாளாக தீவிர விசாரணை
சினிமாவில் நடிக்க வைப்பதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான மலையாள நடிகையிடம் 2-வது நாளாக இன்றும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Aug 2025 12:19 PM IST
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்.. பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்
அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
- 15 Aug 2025 12:15 PM IST
சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பது துரதிருஷ்டவசமானது: ஐகோர்ட்டு கடும் கண்டனம்
சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், ஷெண்ரபள்ளி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றுவதற்கு தனி இடம் ஒதுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த கிருஷ்ணகிரி தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
- 15 Aug 2025 11:57 AM IST
நடுவானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
வானில் பறந்தபோது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அவசரமாக சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டது.
நள்ளிரவு 12.10 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் 166 பயணிகள் உயிர்தப்பினர்.
தற்போது கோளாறு சரிசெய்யப்படாததால் இன்று மாலை கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
- 15 Aug 2025 11:52 AM IST
அதிக கட்டணம் வசூல்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம் விதிப்பு
தொடர் விடுமுறை காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்து தாம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Aug 2025 11:47 AM IST
அமெரிக்காவின் வரி உயர்வு மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
எங்கள் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான எந்தவொரு கொள்கையையும் எதிர்த்து நான் ஒரு தடுப்பு சுவராக நிற்கிறேன். பாரதம் அதன் விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஒருபோதும் சமரசம் செய்யாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 15 Aug 2025 11:38 AM IST
குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு நல்லாட்சி அமைந்திட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி
சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79-வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், நம் தாய்த்திரு நாடு விடுதலை பெற. போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும், இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம். வாழிய பாரத மணித்திரு நாடு!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 15 Aug 2025 11:34 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
- 15 Aug 2025 11:28 AM IST
காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.


















