பலாத்காரம் செய்ய கடத்தப்பட்ட சிறுமி.. விபத்தில் சிக்கிய பைக்.. அடுத்து நடந்த அதிர்ச்சி


பலாத்காரம் செய்ய கடத்தப்பட்ட சிறுமி.. விபத்தில் சிக்கிய பைக்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
x
தினத்தந்தி 29 Oct 2025 8:06 AM IST (Updated: 29 Oct 2025 11:28 AM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒசக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த சிறுமி ஒசக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் பன்னரகட்டா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஒசக்கோட்டை போலீசில் இருந்து சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பு வந்தது.

அப்போது, ஒசக்கோட்டை அருகே நடந்த விபத்தில் சிக்கி உங்கள் மகள் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவளது பெற்றோர் ஒசக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது சிறுமியை பலாத்காரம் செய்ய கடத்தி சென்றபோது பைக் விபத்தில் சிக்கி, அவள் பலியானது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒசக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி சென்றதாக 4 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் ஒசக்கோட்டையை சேர்ந்த அஜய் என்கிற மனோஜ், இர்பான், முபாரக், மற்றொருவன் சிறுவன் என்பது தெரியவந்தது. கடந்த 24-ந்தேதி சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தாள். ஒசக்கோட்டை அருகே பஸ்சுக்காக காத்திருந்தபோது அஜய் தனது நண்பர்களுடன் பைக்குகளில் அங்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமியை பலாத்காரம் செய்வதற்காக பஸ் நிறுத்தத்தில் இருந்து அவளை அஜய் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி சென்றுள்ளனர். ஒரு பைக்கில் அஜய், சிறுமி, மற்றொரு நபரும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் சேர்ந்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றதால், அஜய் ஓட்டிச் சென்ற பைக் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்தாள். அஜய் உள்பட 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story