பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

கோப்புப்படம்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளவர் ரஜினிகாந்த். இவரின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
இவரை பாராட்டும் விதமாக மத்திய அரசு 2000-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், 2016-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கி சிறப்பித்தது. மேலும் சினிமா துறையில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக 2019-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






