தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் அனைத்துக்கட்சி கூட்டம்


தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் அனைத்துக்கட்சி கூட்டம்
x

தெலுங்கானாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

ஐதராபாத்,

மத்திய அரசுக்கும், தெலுங்கானாவுக்கும் இடையே தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் அரசு இன்று பிரஜா பவனில் மாநில எம்.பி.க்களின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்தக் கூட்டம் காலை 11 மணிக்கு துணை முதல்-மந்திரி பட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெறுகிறது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். தொகுதிகளை மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான திட்டத்திற்கும் நேற்று மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

முன்னதாக நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் செய்தால், குடும்பக்கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு வரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி விவாதித்தார். பின்னர் இது தொடர்பான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தென்மாநிலங்களின் கூட்டு குழுவை ஏற்படுத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா, நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.

இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் அபாயம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

தெலுங்கானாவுக்கான நிதியை விடுவிக்கவும், திட்டங்களை அங்கீகரிக்கவும் மத்திய அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதே இந்த அனைத்து கட்சி கூட்டத்தின் நோக்கமாகும். இந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு, இந்தி மொழி சர்ச்சை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பி.சி.க்களுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு மற்றும் சட்டமன்றம் நிறைவேற்றியவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய எஸ்.சி. வகைப்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story