விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்... காதல் மனைவி, மாமனார், மாமியாரை எரித்து கொல்ல முயன்ற வாலிபர்

சிரஞ்சீவி மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கரடகி தாலுகாவில் உள்ள சித்தாப்பூரை சேர்ந்தவர் சிரஞ்சீவி(வயது 29). இவர் தனது உறவினரான ஹலேகுமதா கிராமத்தை சேர்ந்த ரோஜா(27) என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் 2 பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் சிரஞ்சீவி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து இருவரின் பெற்றோரும், அவர்களை அழைத்து சமாதானம் செய்தனர். ஆனாலும் அவர்களுக்கு இடையேயான சண்டை தொடர்ந்து நடந்துள்ளது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ரோஜா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது பெற்றோரின் உதவியுடன் விவாகரத்து கோரி கொப்பல் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை அறிந்த சிரஞ்சீவி ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தார்.
அப்போது கோர்ட்டில் 2 பேருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் கோபமடைந்த சிரஞ்சீவி, பெட்ரோல் பாட்டிலை எடுத்து கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்த தனது மாமனார் சங்கரப்பா, மாமியார் சாந்தம்மா மற்றும் மனைவி ரோஜா ஆகிய 3 பேர் மீதும் ஊற்றினார். மேலும் அவர்கள் மீது தீவைத்து உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து அறிந்த புறநகர் போலீசார் விரைந்து வந்து சிரஞ்சீவியை பிடித்தனர். மேலும் இதுகுறித்து ரோஜா அளித்த புகாரின்பேரில் சிரஞ்சீவி மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.






