பீகார் சட்டசபை தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..?


பீகார் சட்டசபை தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..?
x
தினத்தந்தி 15 Nov 2025 1:39 PM IST (Updated: 15 Nov 2025 2:47 PM IST)
t-max-icont-min-icon

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்றுள்ளது.

பாட்னா,

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டசபை தேர்தல் முடிந்து வாக்கு விவரங்களும் வெளியாகியுள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களிலும், தனியாக களம் கண்ட ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

வாக்கு சதவீதத்தை எடுத்துக்கொண்டால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 20.08 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலைவிட 0.5 சதவீதம் அதிகம் ஆகும். அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்வாகும்.

இந்தியா கூட்டணியை பொறுத்தவரை, தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.11 சதவீதம் குறைவாகும். அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 8.71 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.80 சதவீதம் குறைவு ஆகும்.

ஆக, பீகார் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி எண்ணிக்கையை பார்க்கும்போது வித்தியாசம் அதிகம் தெரிந்தாலும், வாக்கு சதவீதமாக பார்க்கும்போது, வித்தியாசம் பெரிதாக தெரியவில்லை. அப்படி பார்த்தால், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிதான் 4 சதவீதம் அளவுக்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளன.

மற்ற கட்சிகளின் வாக்குகள் ஒரு சதவீதம் என்ற அளவிலேயே வித்தியாசம் உள்ளது. இதேபோல், ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியான லோக் ஜன சக்தி 4.97 சதவீத வாக்குகளையும், பகுஜன்சமாஜ் கட்சி 1.62 சதவீத வாக்குகளையும், ஓவைசி கட்சி 1.85 சதவீத வாக்குகளையும், மார்க்சிஸ்ட் லெனினென்ட் கட்சி 2.84 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக, புதிதாக களம் கண்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story