பீகார்: முன்னாள் முதல்-மந்திரி வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு


பீகார்:  முன்னாள் முதல்-மந்திரி வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு
x

பீகாருக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தள மந்திரி அசோக் சவுத்ரி ஆகியோரின் வீடுகள் அமைந்த பகுதிக்கு அருகே போலோ சாலை பகுதியில் இன்று காலை 2 பேர் பைக்கில் வந்தனர்.

அவர்கள் இளைஞர் ஒருவரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த இந்த இடம் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் பல்வேறு மந்திரிகள், நீதிபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வசித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி பாட்னா நகர எஸ்.பி. தீக்சா கூறும்போது, டாக்டர் ஒருவரிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றும் ராகுல் என்பவர் காலை 8.15 மணியளவில் வேலைக்காக சென்றபோது, துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. எனினும் இதில் அவர் காயம் எதுவுமின்றி தப்பி விட்டார். அவரிடம் இருந்த ரூ.400 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், மொபைல் போன் மற்றும் பிற உடைமைகளை கொள்ளையர்கள் விட்டு விட்டு சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அதிக பாதுகாப்பு நிறைந்த மண்டலங்களிலேயே, அரசால் பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகள் சுதந்திரத்துடன் சுற்றி திரிகிறார்கள். ராஜ் பவன், முதல்-மந்திரி வீடு, எதிர்க்கட்சி தலைவரின் வீடு, ஆகியோரின் வீடுகள் அமைந்த பகுதியில் வெளிப்படையாகவே துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என தெரிவித்து உள்ளார். பீகாருக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story