45 ஆண்டுகள் இடதுசாரிகள் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க.

கோப்புப்படம்
திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா வசப்படுத்தியது. ஆளும் கம்யூனிஸ்டு கடும் பின்னடைவை சந்தித்தது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 941 கிராம பஞ்சாயத்துகள் என 1,199 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் வருகிற 20-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 75 ஆயிரத்து 624 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 73.69 சதவீத ஓட்டுகள் பதிவானது.
காங்கிரஸ் அபாரம்
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறது. மேலும் 54 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி கோழிக்கோடு மாநகராட்சியை பிடித்துள்ளது.
பா.ஜனதா கூட்டணி
45 ஆண்டுகள் இடதுசாரிகள் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன் முறையாக பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. இந்த கூட்டணி மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி 29 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி 19 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். விழிஞ்ஞம் வார்டுக்கான தேர்தல், வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அக்கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் கூறுகையில், “திருவனந்தபுரத்தில் பா.ஜனதா அடைந்துள்ள வெற்றி வரலாற்று சாதனையாகும். இடதுசாரி கூட்டணியின் 45 ஆண்டுகால முறையற்ற ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். இறுதியில் ஆட்சி முறையில் மாற்றத்தை விரும்பிய மக்கள், மற்றொரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், நல்லாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
நகராட்சி
14 மாவட்ட பஞ்சாயத்துக்களை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி 7 மாவட்ட பஞ்சாயத்துக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி 7 மாவட்ட பஞ்சாயத்துக்களையும் கைப்பற்றி உள்ளது. மேலும் 86 நகராட்சிகளில் 54 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், 28 நகராட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியும், 2 நகராட்சிகளை பா.ஜனதா கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. 152 ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 68 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
கிராம பஞ்சாயத்து
941 கிராம பஞ்சாயத்துக்களில், 498 கிராம பஞ்சாயத்துக்களை காங்கிரஸ் கூட்டணியும், 341 கிராம பஞ்சாயத்துக்களை இடதுசாரி கூட்டணியும், 25 கிராம பஞ்சாயத்துக்களை பா.ஜனதா கூட்டணியும் வென்றுள்ளது. கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சி: முன்னாள் பெண் டி.ஜி.பி. மேயராக வாய்ப்பு
கேரள வரலாற்றில் முதன் முறையாக, திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியிடம் இருந்து வசப்படுத்தியுள்ளதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா புத்துயிர் பெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் முதல் பெண் டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ஸ்ரீலேகா (வயது 65). பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் பா.ஜனதா கட்சி சார்பில் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாஸ்தாமங்கலம் பகுதியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இந்தநிலையில் தேர்தலில் வெற்றி பெற்று, கவுன்சிலராக பொறுப்பு ஏற்க இருக்கிறார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி உள்ளது. எனவே, மாநகராட்சி மேயர் வேட்பாளராக களமிறங்க ஸ்ரீலேகாவுக்கு வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது. அவரே மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி ஒரு இடத்தில் வெற்றி
கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு இடங்களில் போட்டியிட்டாலும் வயநாடு அருகே உள்ள கரிங்குண்ணம் ஊராட்சி 13-வது வார்டில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது. அங்கு போட்டியிட்ட ஆம்ஆத்மி வேட்பாளர் பீனா குரியன் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனநாயக முன்னணி வேட்பாளரை விட 113 வாக்குகள் அதிகமாக பெற்றார்.






