மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தாக்கி செருப்பு மாலை அணிவித்த 22 பேர் மீது வழக்கு


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தாக்கி செருப்பு மாலை அணிவித்த 22 பேர் மீது வழக்கு
x

ஆசிரியர் ஜெகதீசை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் டவுனில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ராஜேஷாப் குதானாசாப் சங்கனூர் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் ஜெகதீஷ் வக்கன்னவர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவிக்கு ஆசிரியர் ஜெகதீஷ், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி ஊர் முக்கியஸ்தர்களிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு சென்று ஆசிரியர் ஜெகதீசை பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆசிரியர் ஜெகதீசை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷாப் சவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், ஆசிரியர் ஜெகதீசை தாக்கியதாக சவனூர் பகுதியில் வசித்து வரும் சாதிக் மனியார், ஜீசன் நாகா, அப்துல்கனி பராஸ், பாசில் அகமது உள்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story