ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சூர்,
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பாக பாஜகவையும், தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியில் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பாஜக செய்தி தொடர்பாளரும், கேரளா மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவருமான பிரிந்து மகாதேவ், மலையாள டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ''ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்" எனப் பேசியுள்ளார். மகாதேவ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக மேலிடம் அவர் மீது எந்தவித நடவடிக்கையில் எடுக்கவில்லை.
இதனையடுத்து ராகுல் காந்தி மீது நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது. மேலும் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீகுமார் சிசி அளித்த புகாரின் அடிப்படையில் பெரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பிரிந்து மகாதேவை கண்டித்து கேரளா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று போராட்டங்களை நடத்தினர்.






