பெண்கள் 2 குழந்தைகளை பெற்று கொள்ள சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்; தேவைப்பட்டால்...


பெண்கள் 2 குழந்தைகளை பெற்று கொள்ள சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்; தேவைப்பட்டால்...
x
தினத்தந்தி 13 March 2025 9:10 PM IST (Updated: 13 March 2025 9:14 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சட்டசபையில் மக்கள் தொகை மேலாண்மை பற்றி சில விசயங்களை பேசும்போது, அவையில் சிரிப்பொலி எழுந்தது.

விசாகப்பட்டினம்,

நாட்டின் சராசரி பிறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது, தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு விகிதம் பெரிதும் சரிந்து காணப்படுகிறது. இதில், ஆந்திர பிரதேசமும் அடங்கும். தேசிய சராசரி பிறப்பு விகிதம் 2.1 ஆக உள்ள சூழலில், ஆந்திராவில் 1.6 ஆக உள்ளது.

இந்த நிலையில், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சட்டசபையில் பேசும்போது மக்கள் தொகை மேலாண்மை பற்றி சில விசயங்களை குறிப்பிட்டார். ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது 2 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். இதுபற்றி நாம் பேச வேண்டிய தருணம் இது என கூறினார்.

அப்போது அவர், கிராமங்கள், தொகுதிகள் என அனைத்து மட்டங்களிலும் இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று பிறப்பு விகிதங்களை ஊக்குவிக்கும் வகையில் கூறினார். தேவைப்பட்டால் வருங்காலத்தில் உங்களுடைய வீடுகளை நாங்கள் கண்காணிக்க வேண்டி வரும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். அப்போது, அவையில் சிரிப்பொலியும் எழுந்தது.

நாட்டில் பிறப்பு விகிதம் பற்றி அவர் குறிப்பிடுவது இது முதன்முறையல்ல. கடந்த ஜனவரியில், இந்தியாவில் பிறப்பு விகிதங்கள் சரிவது பற்றி வருத்தம் தெரிவித்த அவர், தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் செய்த தவறில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று கூறினார். அந்நாடுகளில் பிறப்பு விகிதங்கள் பெருமளவில் குறைந்திருந்தன.

2 குழந்தைகளை பெற்றவர்களே இனி பஞ்சாயத்து தலைவர், நகராட்சி கவுன்சிலர் அல்லது மேயராக முடியும். அவர்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வகை செய்ய சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.


Next Story