மோடி அரசின் ஏஜெண்டுபோல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - கார்கே குற்றச்சாட்டு

வாக்களிக்கும் உரிமையை பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
பாட்னா,
பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுயியில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் ஓட்டுப்போடதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஆதாரம் உள்ளதாக பல்வேறு ஆவணங்களை ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். மேலும், பீகார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அம்மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று முதல் வாக்காளர் உரிமை யாத்திரையை தொடங்கியுள்ளார்.
பீகாரின் சசாராம் மாவட்டத்தில் வாக்காளர் உரிமை யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது,
பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும்வரை மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பில்லை. மேலும், அரசியலமைப்பு சாசனத்திற்கு ஆபத்து உள்ளது. வாக்களிக்கும் உரிமையை பறிக்க பாஜக முயற்சிக்கிறது.
மோடி அரசின் ஏஜெண்டுபோல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். அந்த அமைப்பு நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்ததாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அளித்தது. மக்களின் உரிமைகளுக்காக காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கிறது, தொடர்ந்து போராடும்
இவ்வாறு அவர் கூறினார்.






